பட்ஜெட் செய்தி! இரண்டுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருந்தால், அதில் ஒன்றாவது எலக்ட்ரிக் வாகனமாக இருக்க வேண்டுமா?
பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களில் பாதியை எலெக்ட்டிரிக்கல் அல்லது ஹைட்ரஜனால் ஓடும் வாகனமாக மாற்றியமைக்கவேண்டும் என்கிற லட்சியத்தோடு ஆரம்பிக்கப்பட்டது, க்ரீன் எனர்ஜி திட்டம். வரும் பட்ஜெட்டில் க்ரீன் எனர்ஜியை முன்னிறுத்தி என்னவெல்லாம் சலுகைகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
சூரிய ஒளியால் பெறும் மின் சக்தி, காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சக்தி, ஹைட்ரோ கார்பன் மூலமாக கிடைக்கும் மின்சக்தி என க்ரீன் எனர்ஜியில் ஏராளமான மாற்றத்தக்க மின் சக்திகள் இருந்தாலும் சூரிய ஒளியினால் பெறும் மின்சக்திதான் இந்தியாவில் பரவலாக மாற்று சக்தியாக முன் வைக்கப்படுகிறது. இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு ஆர்வமாக உள்ளது.
உக்ரைன் போருக்குப் பின்னர், க்ரீன் எனர்ஜி பற்றிய விவாதங்கள் அதிகரித்து வந்தன. நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்யவும், கார்பன் பயன்பாட்டை குறைக்கவும் மாற்றத்தக்க க்ரீன் எனர்ஜி பற்றி உலகநாடுகளில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் குறைந்தபட்சம் 5 முதல் 6 சதவீத எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்கிற நம்பிக்கையும் எழுந்திருக்கின்றன.
க்ரீன் எனர்ஜி சம்பந்தப்பட்ட முன்னெடுப்புகளில் இந்தியா ஏற்கனவே முன்னணியில் இருப்பதாகவும், உலகளவில் நான்காவது இடத்தை வகிப்பதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாடு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கைகளில் அனைத்திலும் க்ரீன் எனர்ஜி பற்றிய குறிப்புகள் உள்ளன.
2030க்குள் 500 ஜிகாவாட் மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் இலக்கோடு க்ரீன் எனர்ஜி திட்டங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்டில் க்ரீன் எனர்ஜியை தொடர்ந்து முன்னிறுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக டெல்லி வட்டாரங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
க்ரீன் எனர்ஜியை உற்பத்தி செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை முதல் ஜி.எஸ்.டி இறக்குமதி சேவையில் விலக்கு அளிக்க வாய்ப்பிருக்கிறது. க்ரீன் எனர்ஜி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை செய்வதற்கு தனியாக நிதியுதவி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. குறைந்தபட்சம் இரண்டாயிரம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
தனிநபர்கள் காற்றாலைகள் அமைப்பதற்கும், எலெக்ட்ரிக்கல் வாகனங்கள் வாங்குவதற்கும் சிறப்புக் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சீனா போன்ற நாடுகளில் இருப்பது போல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிக வரிவிதிப்பும், எலெக்ட்ரிக்கல் வாகனங்களுக்கு வரி விலக்கு தரவும் வாய்ப்புண்டு.
ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருந்தால், குறைந்தபட்சம் ஒரு எலெக்ட்ரிக்கல் வாகனம் வைத்திருக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். காத்திருப்போம், நாளை தெரிந்துவிடும்!