கொரோனா பரிசோதனையை உடனே அதிகரிக்கவேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா
கொரோனா

கொரோனா பரிசோதனையை உடனே அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் பல மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும், கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை குற்றச்சாட்டியுள்ளது. மருந்துகள், படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவை போதிய அளவு கையிருப்பில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 146 நாட்கள் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 1590 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 8,601 ஆக உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. இன்ஃபுளுயன்சா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22 ஆம் தேதி பிரதமர் மோடி அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா பாதிப்பு நிலவரம், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிதல், கண்காணித்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் உள்பட 5 வகையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ்களின் மரபணு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை விடுத்து இருந்தார்.

தொடர் காய்ச்சல் இருந்து வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com