கல்லூரி விடுதியா? சிறைச் சாலையா?

கேரள உயர்நீதிமன்றம்
கேரள உயர்நீதிமன்றம்

‘கல்லூரி விடுதிகள் சிறைச்சாலைகள் அல்ல’ அனைத்து விதிமுறைகளும் அனைத்து மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மாணவிகளுக்கான ஊரடங்கு தளர்வு தொடர்பான அரசின் புதிய உத்தரவை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் சட்ட உரிமைகள் உள்ளன. எனவே அவர்கள்மீது பாரபட்சமான கட்டுப்பாடுகளை திணிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி விடுதி மாணவிகள் இரவு 9.30 மணிக்கு மேல் வெளியில் வரக்கூடாது என்று கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் இந்த தீர்ப்பை வழங்கினார்.

மாணவிகள் தங்களது மனுவில், மாணவர் விடுதிக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்பதை சுட்டிக்காட்டியிருந்தனர். கடந்த நவம்பர் மாத இறுதியில் உயர்நீதிமன்றம், அரசை அழைத்து கடிந்து கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற்றது. பின்னர் மீண்டும் டிசம்பர் 6 ஆம் தேதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விதிகளை தளர்த்துவதாகவும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் மாணவர்கள் விடுதிக்கு திரும்புவதற்கு அவசாகம் வழங்குவதாகவும் தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரன், மாணவிகளுக்கும் சட்ட உரிமைகள் உள்ளன. இன்னும் சொல்லபோனால் மாணவர்களைவிட அவர்களுக்குத்தான் உரிமைகள் அதிகம். அவர்கள் மீதுபாரபட்சமான கட்டுப் பாடுகளை திணிக்க முடியாது. விடுதிகள் சிறைச்சாலைகள் அல்ல என்று தெரிவித்தார்.

புதிய உத்தரவு பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதாக மாநில மகளிர் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் அதை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

முன்னதாக பெற்றோர்களின் கோரிக்கை மற்றும் இரவு நேரங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப் பட்டதாக உயர்கல்வித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. “ஆடவர்களுக்கு கட்டுப்பாடு விதியுங்கள். அவர்கள்தான் பிரச்னையை உருவாக்குபவர்கள். பெண்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள்” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசின் கடமையாகும். மகளிர் விடுதிகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதால் எந்த நோக்கமும் நிறைவேறாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் பெண்களுக்கு 18 வயதில் சுதந்திரம் அளிப்பது சரியாக இருக்காது. அது சமூகத்துக்கு நல்லதல்ல. 25 வயதில் தான் அவர்கள் முதிர்ச்சி அடைகிறார்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com