தொடரும் ஐஐடி தற்கொலைகள் -  மும்பை ஐ.ஐ.டி வளாகத்தில் பரிதாபம் - ஜாதி கொடுமையா என்று விசாரணை!

தொடரும் ஐஐடி தற்கொலைகள் - மும்பை ஐ.ஐ.டி வளாகத்தில் பரிதாபம் - ஜாதி கொடுமையா என்று விசாரணை!

சென்ற வாரம் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. மறுநாள் மும்பை ஐ.ஐ.டி வளாகத்தில் இன்னொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானபோது, ஐ.ஐ.டி நிர்வாகம் நெருக்கடிக்குள்ளானது.

மும்பை ஐ.ஐ.டியில் விடுதியில் தங்கி படித்து வந்தவர், அகமாதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி. முதலாண்டு மாணவரான தர்ஷன், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். சக மாணவர்கள் தன்னுடைய ஜாதிப் பெயரை சொல்லி கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

ஐ.ஐ.டி வளாகங்களில் ஜாதியக் கொடுமைகள் அதிகமாக இருப்பதாக ஊரில் இருந்த குடும்பத்தினர்களிடமும், பள்ளியில் தன்னுடன் சேர்ந்து படித்த மாணவர்களிடமும் புலம்பி வந்திருக்கிறார். இந்நிலையில் விடுதியின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ஜாதி ரீதியிலான கொடுமைகளின் காரணமாக தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி விசாரிக்க ஐ.ஐ.டி ஒரு விசாரணைக் கமிட்டியை அமைத்திருக்கிறது. இதில் பேராசிரியர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கமிட்டியில் பங்கெடுத்திருப்பதாக ஐ.ஐ.டி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இந்தியா முழுவதுமுள்ள ஐ.ஐ.டி வளாகங்களில் ஜாதியப் பாகுபாடு, மொழி பாகுபாடு நிறைந்திருப்பதாக பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. புதிய இடம், மன அழுத்தம் ஆகியவையெல்லாம் தற்கொலை முடிவில் மாணவர்களை தள்ளிவிடுகின்றன.

மன நல ஆலோசனை தருவதற்காக ஒவ்வொரு ஐ.ஐ.டி வளாகத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதலாண்டு மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டியை ஐ.ஐ.டி நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது.

ஐ.ஐ.டி மட்டுமல்ல இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019ல் உயர்கல்வித்துறை வெளியிட்ட குறிப்புகளின் படி கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் உள்ள 8 ஐ.ஐ.டி வளாகங்களில் 52 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்தது. இதில் 14 சம்பவங்கள், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்திருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com