‘தேசிய கீதம் அவமதிப்பு: மம்தாவுக்குக் கருணை காட்டக்கூடாது’ நீதிமன்றம் உத்தரவு!

‘தேசிய கீதம் அவமதிப்பு: மம்தாவுக்குக் கருணை காட்டக்கூடாது’ நீதிமன்றம் உத்தரவு!

மும்பை, கஃபே பரேட் மைதானம் யஷ்வந்த் ராவ் சவாண் அரங்கத்தில் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவர் எழுந்து நிற்காமல் நாற்காலியிலேயே அமர்ந்திருந்தார். ஆனாலும், தேசிய கீதத்தைப் பாடினார். மேலும், தேசிய கீதம் முடிவதற்கு முன்பு எழுந்து நின்று இரண்டு வரிகளைப் பாடினார். அதுமட்டுமின்றி, தேசிய கீதம் பாடி முடிக்கும் முன்பே நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தை விட்டு அவர் வெளியேறி விட்டார்.

இந்த தேசிய கீதம் அவமதிப்பைக் கண்டித்து சமூக செயற்பாட்டாளர் விவேகானந்த் குப்தா என்பவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மம்தாவுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்தும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் மம்தா பானர்ஜி சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து சம்மனை ரத்து செய்த செஷன்ஸ் நீதிமன்றம், மம்தா பானர்ஜி மீதான புகார் குறித்து மீண்டும் விசாரிக்க உத்தவிட்டது.

செஷன்ஸ் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், மம்தா மீது தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யவும், சம்மன்களை ரத்து செய்யவும் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமித் போர்க்கர், ‘இந்த வழக்கை செஷன்ஸ் நீதிமன்றமே விசாரிக்கலாம். இதில் உயர் நீதிமன்றம் தலையிடாது. மேலும், இந்த வழக்கில் மம்தாவுக்கு எந்தவிதக் கருணையையும் நீதிமன்றம் காட்டக்கூடாது. மம்தா பானர்ஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com