கிரெடிட் கார்டு யுகம் முடிகிறதா? ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனம் தேவை!

கிரெடிட் கார்டு யுகம் முடிகிறதா? ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனம் தேவை!

ரிவார்டு, போனஸ், பர்சேசிங் பவர் என்றெல்லாம் வாடிக்கையாளர்களை 20 ஆண்டுகளாக வசீகரித்து வந்த கிரெடிட் கார்டு உலகத்திற்கு நேரம் சரியில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு நம்மிடம் இருந்தால் பர்சேஸிங் பவர் அதிகமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட கார்கையில் வைத்திருப்பது நல்லதுதான் என்பார்கள். தற்போது இரண்டுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு உங்களிடம் இருந்தால் அதனால் வரப்போகும் பிரச்னைகள்தான் அதிகம்.

கிரெடிட் கார்டில் பில்லை கட்ட தவறினால் விதிக்கப்படும் வட்டி பற்றி நிறைய பேருக்குத் தெரியும். இந்தியாவிலேயே கிரிடெட் கார்டுக்குதான் அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. எந்தவொரு வங்கியாக இருந்தாலும் வாடிக்கையாளரின் வாங்கும் ஆசையை தூண்டிவிட்டு, கட்டத் தவறினால் அதிக வட்டியை விதிப்பது 20 ஆண்டுகளாக இன்றும் தொடர்கிறது.

கிரெடிட் கார்டு வைத்திருப்பது தவறல்ல. ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் நிறைய பலன்கள் உண்டு. மாதந்திர செலவை இரண்டாக பிரித்து, இரண்டு வேறு கிரெடிட் கார்டுகள் மூலமாக சமாளிக்க முடியும். உங்களுடைய கிரெடிட் கார்டு லிமிட் 2 லட்சம் ரூபாய். ஆனால், நீங்கள் பயன்படுத்துவதோ மாதம் ஒரு லட்சம் ரூபாய்தான் என்றால் கிரெடிட் கார்டு பயன்பாடு 50 சதவீதம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

உங்களிடம் இரண்டு கிரெடிட் கார்டு இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொன்றும் 1.5 லட்சம் கிரெடிட் லிமிட் என்றால் உங்களுடைய கிரெடிட் கார்டு பயன்பாடு 33 சதவீதம்தான் என்பதால் அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.

இதெல்லாம் நல்ல விஷயம்தான். ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும்போது, எப்போது பில் கட்டவேண்டும், எவ்வளவு கட்டவேண்டும் என்பதையெல்லாம் கவனமாக நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் கட்டாவிட்டால், தாமதக்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.

குறித்த நேரத்திற்கு பில்லையும் கட்டாவிட்டால் அதிக வட்டி விதிக்கப்படும். அதிக வட்டி விதிக்கப்படுவதாலும் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். இரண்டு கார்டு வைத்திருந்தால் பில் கட்டுவதற்கான கடைசித்தேதியும் அடுத்தடுத்து இருக்கக்கூடாது. போதிய இடைவெளியோடு கூடியதாக இருந்தால் மட்டுமே நம்மால் குறித்த தேதிக்குள் கட்ட முடியும்.

ஆனால், எந்த கிரெடிட் கார்டை எதற்காக பயன்படுத்துவது என்பது முக்கியமானது. லைப்ஸைடைல் கார்டை பயன்படுத்துவதன் மூலமாக நிறைய தள்ளுபடி கிடைக்கும். ஆனால், மற்ற பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்துவதால் எந்த பலனுமில்லை. நீங்கள் அடிக்கடி வெளிநாடு பயணம் செய்பவராக இருந்தால் மட்டுமே டிராவல் கார்டு தேவைப்படும். எப்போதோ பயன்படுத்துவதற்காக ஏன் இப்போதே வாங்கி வைக்க வேண்டும்.

மூன்று கிரெடிட் கார்டுக்கு மேல் எந்தவொரு தனிநபரும் வைத்திருப்பது நல்லதல்ல என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள். அதிலும் ஒரு கிரெடிட் கார்டு, ஒரு லட்சத்திற்கும் குறைவான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக இருக்க வேண்டும். பெரும்பாலான இணைய வழி பரிவர்ததனைகளை இதன் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு போகும்போதோ அல்லது நீண்டகால திட்டமாக எதையாவது வாங்கும்போதுதான் அதிக கிரெடிட் உள்ள கார்டை பயன்படுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டு வேண்டுமா என்பதை தனிநபர்தான் முடிவு செய்யவேண்டும். எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதையும் முன்னரே முடிவு செய்த பின்னர்தான் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். கையில் இருக்கிறதே என்பதற்காக அவசரப்பட்டு அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்திவிடக்கூடாது. கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்ந்து குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆகவே, வங்கிகள் தாமத கட்டணம் அதிகமாக விதிக்க வாய்ப்பிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com