ரேட்டிங் கேட்டு தீர்மானம்! - சென்னைக்கு கிடைக்குமா?

ரேட்டிங் சிஸ்டம்
ரேட்டிங் சிஸ்டம்

குப்பையில்லா நகரம் என்னும் லட்சியத்தை நோக்கி நடைபோடும் இந்திய நகரங்களை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா முழுவதும் உள்ள 299 நகரங்களை தேர்ந்தெடுத்து, அங்கு நடைபெறும் பல்வேறு சுகாதாரப் பணிகளையும், குப்பையில்லாமல் தூய்மையாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்திய நகரங்களின் தூய்மைப் பணிகளை பொறுத்து ஸ்டார் ரேட்டிங் தரப்பட்டது. 9 நகரங்கள் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளன. 143 நகரங்களுக்கு 3 ஸ்டார் ரேட்டிங் கிடைத்திருக்கிறது. தூய்மையான நகரத்தை முன்னெடுக்கும் மாநகராட்சி அமைப்புகளுக்கு பல்வேறு போட்டிகளையும் அறிவித்தது.

குப்பை, கழிவுகளை சேகரிப்பது, அதை பாதுகாப்பான முறையில் அகற்றுவது, பொது இடங்களை குப்பையில்லாமல் பராமரிப்பது என பல்வேறு பரிமாணங்களில் ரேட்டிங் தரப்படுகிறது.

ராஜ்கோட், சூரத், மைசூர், இந்தூர், மும்பை ஆகிய நகரங்கள் இதுவரை 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கின்றன. குறிப்பாக கொரோனா தொற்று, ஊரடங்கு காலத்திலும் நகரத்தை தூய்மையாக பராமரிப்பதில் இவை முன்னணியில் இருந்திருக்கின்றன.

திருப்பதி, விஜயவாடா, சண்டிகர், அகமதாபாத், காந்தி நகர் உள்ளிட்ட நகரங்கள் 3 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களுக்கு குறைந்தது 3 ஸ்டார் ரேட்டிங் கிடைத்திருக்கிறது. ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரங்களுக்கு இதுவரை 3 ஸ்டார் ரேட்டிங் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சென்னைக்கு 3 ஸ்டார் ரேட்டிங் அளிக்குமாறு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையின் 115 மண்டலங்களில் நடைபெறும் தூய்மைப் பணிகளை பட்டியலிட்டிருப்பதோடு, பேட்டரியால் ஓடும் குப்பை சேகரிப்பு வாகனங்கள் குறித்தும், குப்பைகளை மறு சுழற்சி செய்வதற்காக பெருங்குடியில் நடத்தப்படும் ஆய்வுப் பணிகளையும், அதே போன்று கொடுங்கையூரில் நடைபெறவிருக்கும் பணிகளையும் குறிப்பிட்டிருக்கிறது.

ரேட்டிங் கிடைக்க மாநகரட்சியைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் முன்மொழிந்தாக வேண்டும். மேயர் மட்டுமல்லாது அனைத்து வார்டு கவுன்சிலர்கள், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், பொதுமக்கள் வரை அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் 3 ஸ்டார் ரேட்டிங் கிடைக்கும் என்கிறார்கள். சிங்கார சென்னை வாசிகள் நிச்சயம் கைவிடமாட்டார்கள் என்று நம்புவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com