உங்கள் வீட்டில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் இருக்கிறாரா? இதைப் படிங்க முதலில்.....

உங்கள் வீட்டில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் இருக்கிறாரா? இதைப் படிங்க முதலில்.....

பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. பிரதம் என்னும் அமைப்பு பள்ளிக் குழந்தைகளின் கல்வித்திறன் குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. 2005 தொடங்கி, கடந்த 15 ஆண்டுகளாக இதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

616 மாவட்டங்களில் 7 லட்சம் ஆரம்பப் பள்ளிகளில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின் படி பள்ளிக்குழந்தைகளின் கல்வித்திறன் குறித்து பல அதிர்ச்சிகரமான ஆய்வுமுடிவுகள் வெளியாகியிருக்கின்றன. கொரானா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக எழுத்துக் கூட்டி படிக்கும் திறன், கணக்குகளை புரிந்து கொள்வதில் பின்தங்கியிருக்கிறார்கள்.

மூன்றாம் வகுப்பு மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், எட்டாம் வகுப்பு மாணவர்கள் என்று மூன்று பிரிவுகளாக எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக ஐந்தாம் வகுப்பு படிப்பவர்களில் 43 சதவீதம் மாணவர்களால் மட்டுமே இரண்டாம் வகுப்புக்கான பாடங்களை எழுத்துக்கூட்டி படிக்க முடிந்திருக்கிறது. 26 சதவீதம் பேருக்கு மட்டுமே வகுத்தல் கணக்குகளை சரியாக செய்ய முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி, மகராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர் தவிர மற்ற மாநிலங்களில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் நிலை மோசமானதாக இருக்கிறது. குறிப்பாக ஆந்திரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, உள்ளிட் மாநிலங்களில் அடிப்படை கற்றல் திறன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனா தொற்றுப் பரவலுக்கு பின்னர் பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாற்றாக ஒரு சதவீதம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக 6 முதல் 14 வயது கொண்ட பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வருவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. மாணவர் சேர்க்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தாலும், எத்தனை பேர் தொடர்ந்து பள்ளிகளுக்கு வருகிறார்கள் என்பது தெரியவில்லை. 72 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து பள்ளிக்கு வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, மாணவர் சேர்க்கையையும், மாணவர் வருகையையும் சேர்த்தே பார்க்க வேண்டியிருக்கிறது.

தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகளை பெற்றோர்களும் மாணவர்களும் விரும்புவது அதிகரித்திருக்கிறது. கொரோனா முதல் அலைக்குப் பின்னரே இப்படிப்பட்ட நிலையைப் பார்க்க முடிந்தது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது. இதனால் தனியார் பள்ளிகள், கட்டணங்களை குறைத்து, மாணவர் சேர்க்கையை முடுக்கி விட்டிருப்பதும் தெரிகிறது.

டியூஷன் படிப்பதும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் கூட மாணவர்கள், டியூஷனுக்கு செல்லும் போக்கு திடீரென்று அதிகரித்திருக்கிறது. ஏறக்குறைய 30 சதவீத பள்ளி மாணவர்கள், பள்ளிக்கூட நேரத்தை தவிர பிற நேரங்களில் டியூஷனுக்கு செல்கிறார்கள்.

கொரோனா கொண்டு வந்த மாற்றங்கள், நம்மை நிஜமாகவே மிரள வைக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com