'மருத்துவ கோமாளி' பற்றித் தெரியுமா உங்களுக்கு?

'மருத்துவ கோமாளி' பற்றித் தெரியுமா உங்களுக்கு?

"மருத்துவக் கோமாளிகள்" என்பவர்கள் "சிகிச்சைக் கோமாளிகள்" அல்லது "கோமாளி மருத்துவர்கள்" என்றும் அழைக்கப்படுகிறார்கள். உண்மையில் இவர்கள் கோமாளிகள் அல்ல. கோமாளிகளைப் போல நடித்து நோயாளிகளை மகிழ்விப்பார்கள். அதற்கான முறையான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்படும். அப்படி பயிற்சி பெற்ற தொழில்முறை கலைஞர்கள், தங்களது நகைச்சுவையான உடல் மொழிகள், மேஜிக்கல் திறமைகள், பொம்மலாட்டம் மற்றும் இசையைப் பயன்படுத்தி சிரிப்பு மூட்டுவார்கள், இதன் மூலமாக நோயாளிகளின் உடல் மற்றும் மன நலம் மேம்படும் என்பது நம்பிக்கைஅ. இது உலகம் முழுவதும் இப்போது தற்போது வழக்கமான நடைமுறையாகி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டப் பயன்படுகிறது.

கோமாளி சிகிச்சை என்றால் என்ன?

கோமாளி சிகிச்சை என்பது கிட்டத்தட்ட ஒரு நாடக சிகிச்சை முறைக்கு ஒத்ததாகும். இம்முறையில் பயிற்சி பெற்ற மருத்துவக் கோமாளிகள் மூலமாக நோயாளிகள் தங்களுக்குள் உள்ள கோமாளிகளைக் கண்டறிந்து மனம் விட்டுச் சிரித்து உள்ளிருக்கும் ஏக்கங்கள் மற்றும் மனக்குமுறல்கள் நகைச்சுவையான முறையில் குழு அமைப்புகளில் வெளிகொண்டு வருகிறார்கள். இந்த உள் கோமாளி முன்வைக்கப்பட்டவுடன், இந்த நோயாளிகள் தங்கள் அன்றாட வாழ்வில் அபத்தம் மற்றும் முரண்பாடுகள் என்று எண்ணி தவிர்த்திருந்த சில கோமாளித்தனமான நடவடிக்கைகளை மனம் விட்டு வெளிப்படுத்துகிறார்கள். இதன் மூலமாக அவர்களது மனபாரம் குறைகிறது. அவர்களது மனக்கவலைகள் அகற்றப்பட்டு சில மணி நேரங்களை குதூகலத்துடன் செலவளிக்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்தமாக அவர்களது உடல்நலம் மற்றும் மனநலன் இரண்டுமே மேம்பாடு அடைகிறது.

ஆதரவற்ற முதியோர்களுக்கான ஜெண்டில் கிளவுன் சிகிச்சைமுறை…

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆரம்பத்தில் இந்த முறையிலான மெடிக்கல் கிளவுன் சிகிச்சையானது குழந்தைகளுக்காக மட்டுமே இருந்து வந்தது. தற்போது ஜெண்டில் கிளவுன் எனும் பெயரில் ஆதரவற்ற முதிய நோயாளிகளுக்காகவும் இத்தகைய சிகிச்சைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெருகி வரும் ஆதரவற்ற முதியோர், தங்களை அனாதைகளாக உணரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பணம் மட்டுமே பல இடங்களில் நிம்மதியைத் தந்து விடுவதில்லை. மனம் என்றொரு விஷயம் அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கி நிற்கிறது. முதியோரின் அத்தகைய எதிர்பார்ப்புகளை ஈடேற்றுவதே இந்த ஜெண்டில் கிளவுன் அதாவது மருத்துவக் கோமாளி சிகிச்சையின் முக்கியமான கருதுகோளாகும். இது மேலை நாடுகளில் எப்போதிருந்தோ வழக்கத்தில் இருந்து வருகிறது.இந்தியாவில் இப்போது தான் மெல்ல மெல்ல தன் முக்கியத்துவத்தை உணர்த்தத் தொடங்கி இருக்கிறதூ.

கலை வடிவ சிகிச்சைமுறை…

மருத்துவக் கோமாளி சிகிச்சைமுறை என்பதுவும் கூட ஒரு கலை வடிவம் தான் எனலாம். இங்கு கலையானது ஹெல்த்கேர் வடிவில் மேம்பாடு அடைந்திருக்கிறது. அதனுடன் ஒத்துழைக்கிறது எனவும் சொல்லலாம்.

நோயைக் குணப்படுத்தி மன நிறைவு தருவதில் மருத்துவர், கோமாளி இருவரது பங்கும் ஒன்றே!

ராபின் வில்லியம்ஸின் பேட்ச் ஆடம்ஸ் நினைவிருக்கிறதா? இது ஹாஸ்பிடல் க்ளோனிங் சிகிச்சைமுறையை உருவாக்கிய பிதாமகர்களில் ஒருவரான டாக்டர் பேட்ச் (ஹண்டர்) ஆடம்ஸை அடிப்படையாகக் கொண்டது. 1971 இல் அவர் உருவாக்கிய மிக எளிமையான கருத்து தான் இந்த மருத்துவ கோமாளி டெக்னிக். அவரது கூற்றுப்படி, ஒரு நோயாளியை நோய்க்கூறிலிருந்து குணப்படுத்தி மகிழ்ச்சிகரமாக மாற்றும் விஷயத்தில் "ஒரு கோமாளி மற்றும் மருத்துவர்” இருவரது பங்கும் ஒன்றுதான் என்கிறது மெடிக்கல் கிளவுன் சிகிச்சைமுறை.

மேலைநாடுகளில் எப்போதோ வந்து விட்டது.. இந்தியாவுக்கும் இப்போது வந்தாச்சு!

கடந்த 40 ஆண்டுகளில் மருத்துவமனை கோமாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இன்று அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளின் ஒருங்கிணைந்த ஒரு சிகிச்சைமுறையாக இது மாறியுள்ளது.மருத்துவமனை கோமாளிகளின் தலையீட்டால் நோயாளிகள் மற்றும் குறிப்பாக குழந்தைகள் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிகிச்சைக்கு அவர்களின் ஒத்துழைப்பு மிகவும் பாஸிட்டிவ்வாக இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவமனை கோமாளிகளுக்கு உலகம் முழுவதும் பெரும் தேவை உள்ளது, இந்தியாவும் இந்த புதுவிதமான கருத்தாக்கத்தில் தற்போது விழிப்புணர்வுடன் ஈடுபாடு காட்டத் தொடங்கி விட்டது. ஆகவே, மருத்துவக் கோமாளிகள் உலகம் முழுவதும் சென்று தங்களது தேவை இருக்கும் இடங்களில் எல்லாம் கலை நுட்பத்துடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

கோமாளி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

மருத்துவமனை கோமாளிகளில் முக்கியமானது, மற்றெல்லாவற்றையும் போலவே, கோமாளிகள் நன்கு பயிற்சி பெற்றவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது. ஏனெனில், குழந்தையின் சூழலை விளையாடும் இடமாக மாற்றுவது மூக்கு அல்ல, அதன் பின்னால் இருக்கும் முகத்துக்குச் சொந்தக்காரரே! எனவே

மருத்துவக் கோமாளியாகச் செயல்பட விருப்பமுள்ளவர்களுக்கு குழந்தைகள் மற்றும் மருத்துவமனைகளைப் புரிந்துகொள்வதில் பயிற்சி இருக்க வேண்டும், அதே சமயம் கோமாளி குணம் மற்றும் அதற்கான மேம்பாட்டு திறன்களில் அவர் ஆழமான திறமை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

லிட்டில் ஃபிளவர் தியேட்டர் கிளவுன் குழு…

தற்போது இந்த முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் லிட்டில் தியேட்டர் ஹாஸ்பிடல் க்ளோன் குழுவில் 12 தொழில்முறை பொழுதுபோக்கு கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே உலக புகழ்பெற்ற கோமாளி மற்றும் நியூயார்க்கில் ஹாஸ்பிடல் கோமாளி சிகிச்சை முறையின் முதன்மை பயிற்சியாளரான ஹிலாரி சாப்ளின் மூலம் பயிற்சி பெற்றவர்கள். அவர் மருத்துவமனை கோமாளிகளுக்கு பயிற்சி அளிப்பதில் மிகவும் விரும்பப்படும் முதன்மை பயிற்சியாளராகத் திகழ்கிறார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் நம்மிடையே இங்கு சென்னையிலும் இருக்கிறார்கள் எத்துணை மகிழ்ச்சியான செய்தி.

லிட்டில் தியேட்டர் ஹாஸ்பிடல் க்ளோன் ட்ரூப் இந்தியாவிலேயே முதன்முதலாக இப்படியொரு சிகிச்சை முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, இதுபோன்ற தனித்துவத் திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதில் முதன்மையானது என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வாரத்தில் ஒருநாள் எக்மோர் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் வேலை செய்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com