விவசாயிகள் ஒன்றிணைந்தால் நாட்டை ஆள முடியும்: கே.சி.ஆர் நம்பிக்கை!

விவசாயிகள் ஒன்றிணைந்தால் நாட்டை ஆள முடியும்: கே.சி.ஆர் நம்பிக்கை!

விவசாயிகள் நாட்டை ஆளவேண்டும். விவசாயிகள் ஒன்றிணைந்தால் இது சாத்தியமே என்கிறார் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவரும் தெலங்கான முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தும் நோக்கில் அக்கட்சியின் பெயரை சமீபத்தில் பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றியமைத்த தெலங்கான முதல்வர் சந்திரசேகரராவ் (கே.சி.ஆர்), ஒவ்வொரு மாநிலமாகச் சென்று பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நந்தேத்தில் விவசாயிகள் நிறைந்த பேரணி, பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

அவர் அங்கு பேரணியில் பேசியதற்கு காரணம் இருக்கிறது. அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள். அங்கு விவசாயிகள் பலரும் தாங்கள் வசிக்கும் கிராமங்களை தெலங்கானாவுடன் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். தெலங்கானாவில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் பேரணியில் பேசிய கே.சி.ஆர்., காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத ஒரு முன்னணி தேசிய அளவில் உருவாக வேண்டும். குறிப்பாக விவசாயிகள் ஓரணியில் திரளவேண்டும். விவசாயிகள் நினைத்தால் இது முடியாத காரியமல்ல. நம்நாட்டில் விவசாயிகள் 42 சதவீதம் பேர் உள்ளனர். விவசாயத் தொழிலாளர்களையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் இது 50 சதவீதமாகிவிடும்.

இந்த நிலையில் விவசாயிகள் ஒன்றுபட்டால் அவர்களாலும் ஆட்சியமைக்க முடியும். சட்டங்கள் இயற்ற முடியும். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகின்றன. காங்கிரஸ், பா.ஜ.க. மாறி மாறி ஆட்சியமைத்த போதிலும் விவசாயிகள் நலனுக்கு அவர்கள் பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை என்றார்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தற்போதுள்ள அரசுக்கு மாற்றான அரசை உருவாக்க முடியும் என்கிறார் ராவ்.

தெலங்கானாவில் கே.சி.ஆர். அரசு விவசாயிகளுக்கான இன்சூரன்ஸ், முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதுடன் சலுகை விலையில் விவசாயிகளுக்கு விதைகளையும் வழங்கி வருகிறது. மகாராஷ்டிரத்திலும் அதிக அளவில் விவசாயிகள் இருப்பதால் அங்கும் தனது எல்லையை விரிவுபடுத்த பாரத் ராஷ்ட்ர சமிதி திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் தேர்தலில் அங்கு கணிசமான தொகுதிகளில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஒரு அரசியல்கட்சி தேசிய அரசியல்கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், நான்கு அல்லது ஐந்து மாநிலங்களிலாவது அக்கட்சியின் செயல்பாடுகள் இருக்கவேண்டும். மேலும் அந்த மாநிலத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளாவது பெற்றிருக்க வேண்டும். அல்லது மூன்று மாநிலங்களில் மக்களவைத் தேர்தலில் 2 சதவீத வாக்குகளாவது (11 தொகுதிகளிலாவது வெற்றிபெற்றிருக்க வேண்டும்) பெற்றிருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு தேசிய நீரோட்டத்தில் கலக்கும் வகையில் மகாராஷ்டிரத்தில் உள்ள சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்திரசேகர்ராவ் மும்பையில் சந்தித்துப் பேசினார். ஆனாலும், கடந்த ஜனவரி மாதம் பாரத் ராஷ்டிர சமிதி தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com