வேகமெடுக்கும் இணையம்... 5 ஜி அறிவிப்புக்குப் பின்னர் இந்தியாவில் களைகட்டும் இணையப் பயன்பாடு!

வேகமெடுக்கும் இணையம்... 5 ஜி அறிவிப்புக்குப் பின்னர் இந்தியாவில் களைகட்டும் இணையப் பயன்பாடு!

மூன்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இணையத்தின் பயன்பாடு பற்றியும், அதன் வேகம் பற்றியும் கேலி செய்யாத வெளிநாட்டு ஊடகங்கள் இல்லை. டிஜிட்டல் இந்தியா பற்றிய பேச்சுகள் ஆரம்பித்தபோது, அதெல்லாம் இருக்கட்டும். முதலில் இணையத்தொடர்பே இல்லாதபோது எப்படி டிஜிட்டல் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள்.

டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு காலத்தில் இந்தியாவில் இணையம் செயல்படும் வேகம் குறைவாக இருந்தது. குறிப்பாக நேபாள், பங்களாதேஷ் போன்ற நாடுகளை விட பின்தங்கியிருப்பதாக சொல்லப்பட்டது. இணைய பயன்பாட்டு வேகம் ஆகியவற்றில் தெற்காசியாவில் இந்தியாவை குறைத்து மதிப்பிட்டார்கள்.

4ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டாலும் பல கிராமங்கள் இணையத்தால் இணைக்கப்படாத நிலையில் தான் இருக்கிறது என்று குறை கூறினார்கள். உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, போதுமான விழிப்புணர்வு இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். அனைத்தையும் தாண்டி கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய இணையம் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் முக்கியமான பெரு நகரங்களில் 5ஜி நெட்வொர்க் இணைப்பு தரும் பணிகள் ஆரம்பமாகின. அதைத்தொடர்ந்து 4ஜி இணைப்புகளும், அதன் வேகமும் படிப்படியாக சீர்படுத்தப்பட்டன. கொரானா பரவல், டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் கோடிக்கணக்கான மக்கள் மொபைல் மூலமாக இணையத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 44 எம்பிபிஎஸ் இணைய வேகம் கிடைப்பதாகவும், இந்தியாவைப் பொறுத்தவரை சராசரியாக 9.31 எம்பிபிஎஸ் வேகம் மட்டுமே பெறமுடியும் என்றும் பேசப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் படிப்படியாக மாறிப்போய், இந்தியாவின் சராசரி இணைய வேகம் 20 எம்பிபிஎஸ்ஸை கடந்திருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஜி அறிவிப்பு வெளியானது முதல், ஒவ்வொரு மாதமும் இணையத்தின் வேகம் முன்னேற்றம் கண்டு வருகிறது. இணைய வேக குறியீட்டு பட்டியலில் உலக அளவில் இந்தியா 118வது இடத்தில் உள்ளதாக ஊக்லாவின் ஸ்பீட் டெஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது.

மொபைல் இணைப்புகளைப் பொறுத்தவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகபட்ச இணைய வேகத்தை தந்து உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது. பிராட்பேண்ட் இணைய இணைப்புகளில் அதிகபட்ச வேகத்தை தருவதில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் பத்தாண்டுகளுக்கு இவர்களை எட்டிப்பிடிப்பது கடினம் என்றாலும் சில நம்பிக்கை கீற்றுகள் தெரிகின்றன.

மொபைல், பிராட்பேண்ட் இணைப்பு வேகமாக இருந்தாலும் கடந்த ஆறு மாதங்களில் இணைய வேகம் மேம்பட்டு வருகிறது. மொபைல் மூலமாக தரவிறக்கம் செய்யும் வேகமும் இந்தியாவில் தொடர்ந்து அதிகமாகி வருகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com