வங்கக்கடலில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. இது வலு பெற்று புயலாக உருவாகி வருகிறது. இதற்கு மோக்கா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக்கடலோரம் மோக்கா என்னும் புதிய புயல் வலுப்பெற்று வருவதாகவும் கடந்த இரண்டு நாட்களாக காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது தற்போது வலுப்பெற்று 10ம் தேதி புயலாக மாறக்கூடும். இது 11ம் தேதி காலை முதல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர ஆரம்பித்து, வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் மோக்கா புயல் உருவாக உள்ளதால் வேதாரண்யத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக வேதாரண்யம், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
அடுத்த மாதம் 15ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் தொடர்கிறது. விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழுதுபார்த்தல், வண்ணம் பூசுதல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சிறிய பைபர் படகுகள் கடலில் குறைந்த தூரம் வரை சென்று மீன் பிடிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிப்பு நடைபெறவில்லை என்பதால் மோக்கா புயலினால் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.
மோக்கா புயலின் காரணமாக தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கல் அதிகரிக்கும் என்றொரு செய்தி வெளியானது. ஆனால், மோக்கா புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஹ
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். இதனால் கோடை வெய்யிலின் உக்கிரம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.