கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் தற்கொலை முயற்சி!

கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் தற்கொலை முயற்சி!

புதுச்சேரி அரசுக்கு சொந்தமான கூட்டுறவு நிறுவனம் அமுத சுரபியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முப்பது மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் இந்த செயலைக் கண்டித்து கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு அவர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை மட்டும் வழங்குவதாக அரசு உறுதி அளித்தது. மேலும், அந்த சம்பளம் 15ம் தேதிக்குள் கிடைக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

ஆனாலும், அரசு அறிவித்தபடி இன்று வரை ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வழங்கப்படவில்லை. இதனால் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் அரசு அறிவித்த சம்பளத்தை உடனடியாகத் தங்களுக்கு வழங்க வலியுறுத்தி அமுதசுரபி அலுவலகத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் தொடர்ந்து புதுச்சேரி அரசைக் கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பியபடி இருந்தனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் நான்கு பேர் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக தாங்கள் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்தனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக  அவர்களை காவல் துறையினர் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் கூட்டுறவு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் தராததால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com