பிளாஸ்டிக்கை கொடு… தங்கத்தை எடு - ஊர் தலைவரின் அட்டகாசமான அறிவிப்பு.

பிளாஸ்டிக்கை கொடு… தங்கத்தை எடு - ஊர் தலைவரின் அட்டகாசமான அறிவிப்பு.

பிளாஸ்டிக் குப்பைகளைக் கொடுத்து தங்க நாணயம் வாங்கிக் கொள்ளலாம் என ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத் தலைவரின் அறிவிப்பால், அந்த கிராமமே தற்போது பிளாஸ்டிக் இல்லாத இடமாக மாறி உள்ளது. 

நாள்தோறும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மக்களிடம் அதிகரித்து வருகிறது. என்னதான் அரசாங்கம் தங்களால் இயன்ற அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்தாலும், இன்றளவும் அதை மக்கள் அதிகமாக பயன்படுத்திதான் வருகிறார்கள். உதாரணத்திற்கு உங்கள் வீட்டை சுற்றி சற்று நோட்டமிட்டுப் பாருங்கள், எவ்வளவு பிளாஸ்டிக் குப்பைகள் உங்களை சுற்றி உள்ளதென்று. இதை நாம் தற்போது கண்டுகொள்ளவில்லை என்றால், எதிர் காலத்தில் இந்தியாதான் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். 

தெற்கு காஷ்மீர் பகுதியில் இருக்கும் சடிவாரா என்ற கிராமம் தற்போது முற்றிலும் பிளாஸ்டிக்கே இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அந்த கிராமத்தின் தலைவர் அறிவித்த ஒரு திட்டம்தான். சடிவாரா கிராமத்தைச் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பைகளும் அதிகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக அந்த கிராமத்தின் ஓடைகளிலும் ஆறுகளிலும் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதைக் கண்ட அந்த கிராமத்து பஞ்சாயத்துத் தலைவரான 'ஃபரூக் முகமது கனாய்' என்பவருக்கு ஒரு யோசனை வந்தது. 

இதனால், பிளாஸ்டிக் குப்பைகளைக் கொடுத்து தங்க நாணயத்தை வாங்கிச் செல்லலாம் என்ற திட்டத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பால் கிராம மக்கள் அனைவரும் தலைவருடன் இணைந்து ஊரைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வெறும் 15 நாட்களிலேயே சடிவாரா கிராமம் பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாறியது. இதை அந்த கிராமத்தின் துணை ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தங்கள் கிராமத்தை சுத்தப்படுத்தும் பணியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மும்பரமாக ஈடுபட்டு வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். 

2014 ஆம் ஆண்டில், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப் படுத்தும் நோக்கில் அரசாங்கம் வெளியிட்ட, 'ஸ்வச் பாரத் அபியான்' என்ற திட்டம் உந்துகோளாக இருந்ததாகவும், இதைத் தொடர்ந்து தான் பிளாஸ்டிக் குப்பைக்கு தங்கம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டதாகவும் ஊர்த் தலைவரான ஃபரூக் கூறியுள்ளார். இவருடைய அறிவிப்பின்படி 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்த நபர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. 

மேலும், இத்திட்டத்தை, தங்கள் கிராமத்தில் மட்டுமல்லாமல் காஷ்மீரிலுள்ள பல கிராமங்களிலும் தொடங்கி, கன்னியாகுமரி வரை கொண்டுசெல்ல தான் தயாராக இருப்பதாகவும், இதைப் பயன்படுத்தி இந்தியாவையே பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நாடாக மாற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com