'கடவுள் சொன்னார், நான் செய்தேன்' காவல்துறையிடம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல்லெறிந்தவர் அளித்த பதில்!

'கடவுள் சொன்னார், நான் செய்தேன்' காவல்துறையிடம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல்லெறிந்தவர் அளித்த பதில்!

ஏப்ரல் 16 அன்று பெங்களூரு ரயில்வே கோட்டத்தில் மலூர் மற்றும் தியாகல் இடையே கடந்து செல்லும் ரயில்கள் மீது கற்களை வீசியதற்காக 36 வயது நபரை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) கைது செய்தது. அபிஜித் அகர்வால் என்ற பெயருடைய அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்று சந்தேகிக்கப்படுகிறார். அவரை, ரயில்வே சட்டம் 153 மற்றும் 147 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாலூரில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

RPF இன் பயணிகள் சேவைகள் இன்ஸ்பெக்டர் எஸ்.கே.தாபா ஊடகங்களிடம் பேசுகையில்,

“நானும் எனது குழுவும் சிவில் உடையில் ரயில் தண்டவாளத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, ஞாயிறு மதியம் 3.43 மணிக்கு அவர் தண்டவாளத்தில் இருந்து ஜல்லிக் கற்களை எடுத்து, கடந்து செல்லும் SMVB-பாட்னா ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் மீது வீசுவதைக் கண்டோம்.

வந்தே பாரத் உட்பட மற்ற இரண்டு ரயில்கள் விரைவில் கடந்து செல்லவிருந்தன. அதற்கு முன்பே அவரைப் பிடித்தோம். ஒரு நாள் முன்னதாக அந்த இடத்தைக் கடந்து சென்ற மைசூரு-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீசியதற்கு அவர் பொறுப்பேற்றுள்ளார். ரயிலின் வெளிப்பகுதியில் மட்டும் கல் தாக்கியதால், காயங்களோ, சேதமோ ஏற்படவில்லை.

அந்த நபர் மனச்சோர்வடைந்த நிலையில் தனது பையில் நிறைய உணவை எடுத்துச் சென்றுள்ளார். அத்துடன் "அவர் ரயில் தண்டவாளங்கள் அல்லது ரயில் நிலையங்களில் மட்டுமே சாப்பிடுகிறார், தூங்குகிறார் என்று அங்கிருந்தோர் கூறினர். ரயில்கள் மீது கற்களை எறியுமாறு கடவுள் தான் தனக்குக் கட்டளையிட்டதாகவும், அதை அவர் நிறைவேற்றியதாகவும், அப்படிச் செய்தால் அவருக்கு உணவு கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அந்த நபர் இதையே தனது வழக்கமாகக் கொண்டவர் எனத் தெரிய வந்திருக்கிறது”

- என்ற அவர் மேலும் பேசுகையில்

“பெங்களூரு பிரிவு முழுவதும் கல் வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், நாங்கள் எங்கள் மூன்று ஷிப்டுகளை இரண்டாகக் குறைத்துள்ளோம். ஒவ்வொரு ஷிப்டிலும் கிட்டத்தட்ட 100 பேர் வீதம் 12 மணி நேர ஷிப்ட் காவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அவரைப் பிடிக்க எங்களுக்கு உதவியது. என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com