‘கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்!’

‘கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்!’

குஜராத் மாநிலத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் 2002ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராம பக்தர்கள் இருந்த பெட்டி ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் 59 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அந்த சமயத்தில் இந்த வழக்கை விசாரித்த குஜராத் மாநில விசாரணை நீதிமன்றம் குற்றம் செய்ததாகக் கருதப்படும் 11 பேருக்குத் தூக்கு தண்டனையும் மற்றும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்தத் தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் 11 பேருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஃபரூக் என்பவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் பலரும் தங்களுக்கும் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து, இதுகுறித்து குஜராத் மாநில அரசு பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்று குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட 11 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். சபர்மதி ரயிலின் எரிக்கப்பட்ட கோச் வெளிப்புறமாக பூட்டப்பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மேலும், பயணிகள் தப்பிக்க முடியாதபடி அவர்கள் கல் எறிந்தும் உள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 59 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால், குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் இதை வெறும் கல் எறிந்த சம்பவம் போல் வாதிடுகின்றனர். அதனால் அவர்களுக்கு இந்த வழக்கில் ஜாமீன் தரக்கூடாது. மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்” என வாதம் செய்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com