ஷிண்டே கோஷ்டி உருவாவது குறித்து உத்தவிடம் முன்பே எச்சரித்தேன்: அஜீத் பவார்

ஷிண்டே கோஷ்டி உருவாவது குறித்து உத்தவிடம் முன்பே எச்சரித்தேன்: அஜீத் பவார்

கடந்த 2019 மகாராஷ்டிரத் தேர்தலில் அதிக இடங்களை வென்றிருந்த சிவசேனைக் கட்சி, பா.ஜ.க.வுடனான உறவை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் ‘மகாராஷ்டிர விகாஸ் அகாதி’ என்ற புதிய கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைத்தது.

ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷிண்டே கோஷ்டியினர் சிவசேனை தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியை அடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து இடைத்தேர்தல் வரும் என்று உத்தவ் தாக்கரே எதிர்பார்த்தார். தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை.

சிவசேனைக் கட்சியில் பிளவு ஏற்பட்டதை அடுத்து  ஷிண்டே தலைமையிலான பிரிவினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தனர். ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் உள்ளனர்.

இதனிடையே சிவசேனையில் பிளவு ஏற்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், தேசியவாதக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், சிவசேனைக் கட்சிக்குள் அதிருப்தியாளர்கள் உருவாகி வருவது குறித்து முன்னரே எச்சரித்தோம். ஆனால், உத்தவ் தாக்கரே  அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது பவார், துணை முதல்வராக இருந்தார்.

சிவசேனைக் கட்சிக்குள் அதிருப்தி கோஷ்டி உருவாகி வருவது குறித்து உத்தவ் தாக்கரேயிடம் நானும், தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பாவரும் பலமுறை கூறினோம். ஆனால், அவர், “எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. என்னை மீறி யாரும் செயல்படமாட்டார்கள்” என்று தெரிவித்துவிட்டார் என்று புனேயில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். (மகாராஷ்டிர விகார் அகாதி கூட்டணியில் உத்தவர் தாக்கரே தலைமையிலான சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மூன்றும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.)

முதல் கட்டமாக 15 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்திக் கட்சியை விட்டு வெளியேறினர். இந்தச் சம்பவத்தை அடுத்து கட்சியை உத்தவ் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான முயற்சியை அவர் எடுக்கவில்லை. கட்சியை விட்டு யாராவது வெளியேற விரும்பினால் தாராளமாக வெளியேறலாம் என்ற மனோநிலையிலயே அவர் இருந்து விட்டார். தன்னை மீறி யாரும் நடக்க மாட்டார்கள் என்று அவர் கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டதுதான் பிளவுக்குக் காரணம் என்று அஜீத்பவார் தெரிவித்தார். கட்சியில் பிளவு ஏற்படும் வரை தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது எனக்குப் புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிவசேனையில் பிளவு ஏற்படப் போவது எனக்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே தெரியும். நான் இதுபற்றி உத்தவை எச்சரித்தேன். ஏக்நாத்திடம் பேசிச் சமாதானப்படுத்துகிறேன் என்று எனக்குப் பதில் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிருப்தியாளர்கள் கை ஓங்கியதும், அந்தச் சந்தர்ப்பத்தை ஏக்நாத் ஷிண்டே நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க. ஆதரவுடன் உத்தவிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொண்டு விட்டார். 39 சிவசேனை எம்.எல்.ஏ.க்களும் 10 சுயேச்சைகளும் எதிர்க் கோஷ்டியில் சேர்ந்து கொண்டு மகாராஷ்டிர விகாஸ் அகாதிக் கூட்டணியை வீழ்த்திவிட்டனர் என்றார் அஜீத் பவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com