கூகுள் நிறுவனத்தை தொடர்ந்து ஐ.பி.எம், என்று தணியும் இந்த பணி நீக்கம்?

கூகுள் நிறுவனத்தை தொடர்ந்து ஐ.பி.எம், என்று தணியும் இந்த பணி நீக்கம்?

சென்ற வாரம் கூகிள் நிறுவனம், 12 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்த வாரம், ஐ.பி.எம் வாரம். ஐ.பி.எம் நிறுவனத்தைச் சேர்ந்த 3,900 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட், ஐ.பி.எம் என முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களை குறைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் ஐ.டி துறை பீதியில் இருப்பது உண்மைதான்.

கடந்த ஆண்டு மட்டும் உலகெங்கும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் ஐ.டி துறையில் வேலை இழந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பன்னாட்டு முன்னணி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். அங்கே குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்தவர்கள்.

பெரும்பாலான நிறுவனங்கள் 5 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை ஊழியர்களை குறைக்கப்போவதாக முன்னரே வெளிப்படையாக அறிவித்த பின்னரே இதை செய்திருக்கிறார்கள்.

வேலையிழந்தவர்களில் ஏறக்குறைய 40 சதவீதம் பேர் இந்தியர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசா காலாவதியாவதற்குள் வேறு வேலையைத் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

கொரானா தொற்று பரவல் ஆரம்பித்த பின்னர், ஐ.டி துறை உச்சத்திற்குச் சென்றது. ரிமோட் மூலமாக பணியாற்ற முடியும் என்கிற வசதி இருந்ததால் நிறுவனங்களும், ஊழியர்களும் அதை சரிவர பயன்படுத்திக் கொண்டார்கள்.

பல ஐ,டி ஊழியர்கள் பத்து மணி நேரங்களுக்கு மேல் பணியில் இருந்தார்கள். இதனால் ஊழியர்களின் நேரத்தை நிறுவனங்கள் பெருமளவில் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

அதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளும் அதிகரித்தபடி இருந்தன. பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல சிறிய நிறுவனங்கள் கூட புதிதாக ஆட்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள தயாராக இருந்தார்கள்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வரை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த ஆள்சேர்க்கை ஏனோ திடீரென்று தடைப்பட்டது. அடுத்து வந்த மூன்று மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறிப்போய்விட்டது.

ஆள் குறைப்பை நியாயப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்கள் சொல்லும் காரணங்கள், வேடிக்கையாகவே இருக்கின்றன. உக்ரைன் போர் முதல் பங்கு சந்தை சரிவு வரை பல காரணங்களை அடுக்குகிறார்கள்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை டெக்னாலஜி நிறுவனங்கள், மொத்த எண்ணிக்கையில் 2 சதவீதம் மட்டுமே இருப்பதால் பெரிய அளவில் தாக்கமில்லை என்கிறார்கள்.

முன்பு அமெரிக்காவில் வேலை இழப்பு நிகழ்ந்தால் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறியிருக்கிறது. அமெரிக்காவில் எது நடந்தாலும் அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com