இணைய முடக்கம் - போர்முனையில் உள்ள உக்ரைனை விட இணையத்தை முடக்குவதில் நம்பர் ஒன் இந்தியாதான்!

இணைய முடக்கம் - போர்முனையில் உள்ள உக்ரைனை விட இணையத்தை முடக்குவதில் நம்பர் ஒன் இந்தியாதான்!

கடந்த பத்தாண்டுகளில் 641 இணைய முடக்கங்கள் இந்தியாவில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோது 399 முறை இணைய முடக்கம் கொண்டு வரப்பட்டது. உலகிலேயே அடிக்கடி இணைய முடக்கமுள்ள நாடு என்கிற பெயர், தொடர்ந்து இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.

இணையப் பயன்பாடு என்பது அடிப்படையான மனித உரிமை என ஐக்கிய நாடுகள் சபையும் கூறி வருகிறது. சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவதை தடுப்பதற்காக அடிக்கடி இணைய முடக்கம் (Internet Shutdown) கொண்டு வரப்படுகிறது. ஆனால், இணைய முடக்கம் என்பது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கான ஒரு கருவியாக இருக்க கூடாது. உண்மையான ஜனநாயகம் என்பது இணைய வழி சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவு இணைய முடக்கம் நிகழ்ந்திருக்கிறது. நியூயார்க்கை சேர்ந்த ஆக்ஸஸ் நவ் என்னும் தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 187 இணைய முடக்க நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் 84 இணைய முடக்கம் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. அதிலும் ஏறக்குறைய 50 இணைய முடக்கம் காஷ்மீர் பகுதிகளில் ஏற்பபட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுவதால் இந்திய அரசு 40 முறை இணையத்தை முடக்கியிருக்கிறது. சென்ற ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி காலக்கட்டங்களில் மூன்று நாட்கள் தொடர்ந்து அங்கே இணையம் ஸ்தம்பித்திருக்கிறது. கொரோனா தொற்றுக்குப் பின்னர் மூன்று நாட்கள் தொடர் ஊரடக்கம் காஷ்மீர் பகுதிகளில்தான் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஒரு ஆறுதலான செய்தியும் உண்டு. கடந்த ஐந்தாண்டுகளில் கடந்த ஆண்டில்தான் நூறுக்கும் குறைவான இணைய முடக்கம் இந்தியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் உக்ரைனை விட இந்தியாவில் இணைய முடக்கம் அதிகம். கடந்த ஓராண்டாக ரஷ்யாவுடனான போர் உச்சத்தில் உள்ள உக்ரைனில் கூட போர்ச்சூழலில் இல்லாத இந்தியாவை விட இணைய முடக்கம் குறைவாகவே இருந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com