ஜல் ஜீவன் இயக்கம் - வீடு தோறும் குழாய் மூலம் குடிநீர்! பா.ஜ.கவின் பெயர் சொல்லும் திட்டமா?

ஜல் ஜீவன் இயக்கம் - வீடு தோறும் குழாய் மூலம் குடிநீர்! பா.ஜ.கவின் பெயர் சொல்லும் திட்டமா?

மைசூர் நகரத்திலிருந்து 40 நிமிட பயணத்தில் இருக்கிறது, அந்த குக்கிராமம். கிராமத்தின் நடுவில் ஒரு கட்டிடம். வெளியே பெரிய நீர்த்தொட்டி கட்டபபட்டுள்ளது. கட்டிடத்தின் ஒரு பகுதியில் ராட்சச கலன்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் மீது சோலார் பேனல் வைக்கப்பட்டிருக்கிறது. ஜல் ஜீவன் திட்டப்பணிகள் நிறைவடையும் கட்டத்தில் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கிறார்கள்.

கர்நாடகாவின் நிறைய கிராமங்களில் ஜல் ஜீவன் பணிகள் விறுவிறுப்பாக நடந்த வருகின்றன. தேசிய அளவில் 70 ஆயிரம் கோடி, ஜல் ஜீவன் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு கிராமங்களிலும் திட்டம் நிறைவேற இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய்களின் மூலமாக குடிநீர் வழங்கப்படுவதுதான் திட்டத்தின் நோக்கம்.

ஜல் ஜீவன் இயக்கம், 3.6 லட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கீடு 50 சதவீதமும், எஞ்சியவற்றை மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும். நடப்பாண்டில் 54 ஆயிரம் கோடி ரூபாயை ஜல் சக்தி அமைச்சகம் ஒதுக்கியிருக்கிறது. சென்ற ஆண்டு 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சமீபத்திய பட்ஜெடில் கூடுதலாக 17 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. அடுத்து வரும் ஓராண்டில் ஜல் ஜீவன் சம்பந்தப்பட்ட விஷயங்களை மத்திய அரசு தொடர்ந்து முன்னிறுத்தும் என்று நம்லாம்.

வீடு தோறும் குழாய்கள் வழியாக குடிநீர் என்பது, ஒவ்வொரு வீடும் குறைந்தபட்சம் 55 லிட்டர் தண்ணீரை ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும். 92 சதவீத வீடுகளுக்கு வாரத்தின் அனைத்து நாட்களும் தண்ணீர் கிடைக்கும். 8 சதவீத வீடுகளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது தண்ணீர் கிடைக்கும்.

சரி, தற்போதைய நிலை என்ன? இதுவரை 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது- கடந்த ஆண்டின் இறுதியில் திட்டத்தின் 53 சதவீத இலக்கை எட்டிவிட்டோம் என்று அமைச்சகம் அறிவித்தது. தடுப்பூசி போல வெறும் செய்திகள் மட்டும்தான் வருகின்றனவே தவிர திட்டத்தில் நிஜமான முன்னேற்றம் இல்லை என்று எதிர்க்கட்சிகளும் விமர்சித்திருக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் ஜல் ஜீவன், மக்கள் மத்தியில் தனக்கு சாதகமாக பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க அரசு நினைக்கிறது. நடைமுறையில் சாத்தியமில்லாத மெகா திட்டம் என்று விமர்சிக்கும் வல்லுநர்கள், இதில் 50 சதவீதம் நிறைவடைந்தாலே பெரிய வெற்றிதான் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.

தமிழ்நாடு, இமாச்சல் பிரதேசம், கோவா, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 80 சதவீத கிராமங்களுக்கு ஜல் ஜீவன் பணிகள் முடிவடைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அது உண்மையா, இல்லையா என்பதை தமிழக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும்தான் உறுதிப்படுத்தியாக வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com