பீகாரில் நிதிஷ்குக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய குஷ்வாஹாவின் பதவி பறிப்பு!

பீகாரில் நிதிஷ்குக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய குஷ்வாஹாவின் பதவி பறிப்பு!

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர்களில் ஒருவரான உபேந்திர குஷ்வாஹாவுக்கும், கட்சித் தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமாருக்கும் இடையிலான கடந்த சில நாட்களாகவே மோதல் முற்றி வருகிறது.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக இருக்கும் உபேந்திர குஷ்வாஹா சமீபகாலமாக நிதிஷ்குமாரை வெளிப்படையாகவே தாக்கி பேசி வருகிறார். கட்சி விவகாரங்களை விவாதிக்க உடனடியாக கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்ட தயாரா என்று கேட்டு நிதிஷ்குமாருக்கு சவால் விடுத்தார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சி மெல்ல மெல்ல பலமிழந்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள குஷ்வாஹா, லாலு கட்சியுடன் புதிய கூட்டணி அமைத்தபோது நடந்த பேரம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்று நிதிஷ்குமாரை வலியுறுத்தி வருகிறார்.

குஷ்வாஹாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக நிதிஷ் உறுதியளித்த்தாகவும் ஆனால், பதவி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலிருந்து ராஜிநாமாச் செய்துவிட்டு எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுடன் குஷ்வாஹா கைகோர்க்கக்கூடும் என்று பேசப்பட்டு வருகின்றன. ஆனால், இதை அவர் மறுத்து வருகிறார்.

கட்சியில் அல்லது ஆட்சியில் தமக்கு முக்கிய பங்கு அளிக்கப்படும் என்று குஷ்வாஹா எதிர்பார்த்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. இதனால்தான் அவர் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

“உபேந்திர குஷ்வாஹாவுக்கு நாங்கள் மரியாதை கொடுத்து வருகிறோம். அவரை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினோம். இப்போது அவர் எம்.எல்.எல்.சியாக உள்ளார். துணை முதல் பதவி தரமுடியாது. அவர் கட்சியில் தொடர்ந்து இருக்கலாம் அல்லது வெளியேற விரும்பினால் வெளியேறலாம். அதனால் கட்சி ஒன்றும் பலவீனமாகிவிடாது” என்று பதிலடி கொடுத்துள்ளார் நிதிஷ்குமார்.

இந்த நிலையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து குஷ்வாஹா நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லல்லன் தெரிவித்துள்ளார்.

குஷ்வாஹா இப்போது வெறும் எம்.எல்.சி. மட்டுமே. அவர் கட்சியில் தொடர்ந்து நீடித்தால் மீண்டும் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவி கொடுப்பது குறித்து மீண்டும் யோசிக்கப்படும் என்றும் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சி பலவீனமாகி வருவது குறித்து விவாதிக்க நடைபெறும் இரண்டு நாள் கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சியின் உறுப்பினர்களுக்கு குஷ்வாஹா கடிதம் அனுப்பியுள்ள நிலையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com