சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்த சிறுத்தை சாஷா!

சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்த சிறுத்தை சாஷா!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு (KNP) ஏழு பெரிய சிறுத்தைகளுடன் இடமாற்றம் செய்யப்பட்ட நமீபியன் சிறுத்தை சாஷா திங்களன்று சிறுநீரகக் கோளாறால் இறந்ததாக வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சிறுத்தை குனோ தேசியப் பூங்காவுக்கு வந்து 6 மாதங்களுக்குப் பிறகு இப்படி நடந்திருப்பது அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் கவலைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது.

நான்கரை வயதுக்கு மேற்பட்ட சிறுத்தை சாஷாவின் மரணம், புராஜெக்ட் சீட்டா திட்டத்தைப் பொருத்தவரை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது, இது இந்தியாவில் உலகின் அதிவேக நில விலங்குகளின் எண்ணிக்கையை மீட்டெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம், 70 ஆண்டுகளாக அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனமாகக் கருதப்படும் இந்த அதிவிரைவோட்ட சிறுத்தைகளின் இருப்பை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசின் வன விலங்குகள் காப்பகத் துறையின் மிக முக்கியமான முன்னெடுப்பாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்கான ஒரு முன்னோட்டமாகத்தான், கடந்த ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதியில் நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டு ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள KNP இல் தங்க வைக்கப்பட்டன.

நமீபியாவில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பே சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த சாஷா, இங்கு வந்த 6 மாதங்களுக்குப் பின் உயிரிழந்தது என்று முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (பிசிசிஎஃப்-வனவிலங்கு) ஜே.எஸ்.சௌஹான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"மார்ச் 22 அன்று ஒரு கண்காணிப்புக் குழு சாஷாவை மிகவும் சோர்வாக இருப்பதைக் கண்டறிந்தது, அதைத் தொடர்ந்து அவர்கள் சாஷாவை தனியறையில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். - என்று அவர் கூறினார்.

அன்றைய தினம் வனவிலங்குகளின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

கையடக்க அல்ட்ராசவுண்ட் இயந்திரத்துடன் ஆயுதம் ஏந்திய வனவிலங்கு நிபுணர் ஒருவர் நோய்வாய்ப்பட்ட சிறுத்தையைப் பரிசோதிக்க KNP க்குள் சென்றார், அதில் சாஷாவின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என்று செளஹான் கூறினார்.

பின்னர், இந்தியாவின் மூத்த வனவிலங்கு நிறுவன (WII) விஞ்ஞானிகள் மற்றும் KNP நிர்வாகம் சாஷாவின் சிகிச்சை வரலாற்றை அறிய நமீபியாவில் உள்ள சீட்டா பாதுகாப்பு நிலையத்தைத் தொடர்புகொண்டனர்.

ஆகஸ்ட் 15, 2022 அன்று சேகரிக்கப்பட்ட சாஷாவின் கடைசி இரத்த மாதிரியில் (KNP க்கு மாற்றப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு), அதன் கிரியேட்டினின் அளவு 400 (சிறுநீரக செயல்பாட்டின் மோசமான குறிகாட்டி) என்று அவர்கள் கண்டறிந்தனர்.

KNP க்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பே, சிறுத்தை சாஷா சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தது என்பதை உயர் கிரியேட்டினின் அளவு தெளிவாக உறுதிப்படுத்தியது, என செளஹான் ஒரு அறிக்கையில் கூறினார்.

நமீபிய வனவிலங்கு நிபுணர்கள் மற்றும் KNP கால்நடை மருத்துவர்கள் சாஷாவை குணப்படுத்த இரவு பகலாக கடுமையாக உழைத்தும், சிறுத்தை உயிர்பிழைக்கவில்லை. ஆனால், அதனுடன் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மற்ற ஏழு சிறுத்தைகள் நன்றாகச் செயல்படுகின்றன. என்று வனத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஏழு சிறுத்தைகளில், மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் பூங்காவின் திறந்தவெளி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டு வனத்துறை கண்காணிப்பில் இருக்கின்றன என்று தகவல், மேலும் அந்த விலங்குகள் அனைத்தும் "முற்றிலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், சாதாரண முறையில் வேட்டையாடும் திறனுடனுடம் இருக்கின்றன" என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து KNP க்கு கொண்டு வரப்பட்ட 12 சிறுத்தைகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளன, அவை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாகவும் தகவல்.

செப்டம்பர் 17 அன்று KNP இல் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் ஐந்து ஆண் மற்றும் 3 பெண் சிறுத்தைகள் அடங்கிய 8 சிறுத்தைகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன.

இந்தியாவில் கடைசி சிறுத்தை 1947 இல் இன்றைய சட்டீஸ்கர் மாநிலத்தின் கோரியா மாவட்டத்தில் இறந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com