‘மகாராஷ்டிர விகாஸ் அகாதி’ - கூட்டணி முறிவதற்கு வாய்ப்பே இல்லை!!

சரத் பவார்
சரத் பவார்

காங்கிரஸ் கட்சியில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருந்தவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சிக்குள் அவ்வப்போது ஏற்படும் உட்கட்சி பூசல்களை தீர்ப்பதிலும், தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதிலும் முக்கிய பங்காற்றி அரசியல் சாணக்கியர் என்று பெயர் பெற்றவர் பவார். சரத் பவாருக்கு பிரதமர் பதவிக்கான அனைத்து தகுதியும் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியில் ஒருசிலர் பகிரங்கமாக தெரிவித்ததன் எதிரொலி மற்றும் ஒருசில கருத்து வேறுபாடுகள் காரணமாக பவார் காங்கிரசிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கி அதை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

கடந்த 2019 மகாராஷ்டிர தேர்தலில் அதிக இடங்களை வென்றிருந்த சிவசேனை கட்சி, பா.ஜ.க.வுடனான உறவை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் ‘மகாராஷ்டிர விகாஸ் அகாதி’ என்ற புதிய கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைத்தது.

ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷிண்டே கோஷ்டியினர் சிவசேனை தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்தியத்தின் காரணமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து இடைத்தேர்தல் வரும் என்று உத்தவ் தாக்கரே எதிர்பார்த்தார். தேர்தலை சந்திக்க தயாராக இருக்குமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை.

சிவசேனை கட்சியில் பிளவு ஏற்பட்டதை அடுத்து ஷிண்டே தலைமையிலான பிரிவினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தனர். ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் உள்ளனர்.

இந்த நிலையில் கோல்ஹாபூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், 2024 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை மற்றும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

சிவசேனை கட்சியில் பிளவு ஏற்பட்டாலும் பெரும்பாலானவர்கள் உத்தவ் தாக்கரேயைத்தான் ஆதரிக்கிறார்கள். தற்போதுள்ள எம்..பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் நின்றாலும், தேர்தல் சமயத்தில் அவர்கள் உத்தவ் பக்கம் வந்துவிடுவார்கள். ஏனெனில் மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சியினரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுகிறோம். எந்த பிரச்னை வந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்கிறோம். எனவே இந்த கூட்டணி முறிவதற்கு வாய்ப்பே இல்லை என்றார் சரத் பவார்.

கர்நாடகத்துடனான எல்லைப் பிரச்னை குறித்து பவாரிடம் கேட்டபோது, அந்த விவகாரம் இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். அப்போது விவாதித்து ஒருமித்த கருத்துடன் மகாராஷ்டிர தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com