90 கண்டெய்னர்களுடன் மாயமான  சரக்கு ரயில்; திணறும் ரயில்வே அதிகாரிகள்!

90 கண்டெய்னர்களுடன் மாயமான சரக்கு ரயில்; திணறும் ரயில்வே அதிகாரிகள்!

90 கண்டெய்னர்களுடன் துறைமுகம் நோக்கி சென்ற ரயில் ஒன்று திடீரென காணாமல் போன சம்பவம் ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிப்ரவரி 1-ம் தேதி 90 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று நாக்பூரிலிருந்து மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்குப் புறப்பட்டது. ஐந்து நாட்களில் போய் சேர வேண்டிய இந்த ரயில் 12 நாட்கள் ஆகியும் இதுவரை அங்கு போய் சேரவில்லை. என்ன ஆனதோ என்று குழம்பிய அதிகாரிகள் ரயிலை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

நாக்பூர் - மும்பை PJT1040201 என்ற எண் கொண்ட சரக்கு ரயில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் MIHAN இன்லேண்ட் கண்டெய்னர் டிப்போவில் இருந்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மும்பைக்கு புறப்பட்டது. இந்த ரயில் 90 கண்டெய்னர்களுடன் கிளம்பியுள்ளது. அந்த ரயில் 4 அல்லது 5 நாட்களில் மும்பையைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த சரக்கு ரயில் கண்டெய்னர்களுடன் மும்பை வந்து சேரவில்லை.

கடைசியாக அந்த ரயில் ‘கசரா’ என்ற ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும் அதன் பிறகு காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. 90 கண்டெய்னர்களுடன் ரயில் காணாமல் போனது எப்படி என்ற ஆச்சரியத்தில் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் இன்ஜினுக்கும், ரயில்வே அலுவலகத்துக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல கோடி மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போன அந்த ரயிலில், ஏற்றுமதி தரம் கொண்ட அரிசி, காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களால் நிரப்பப்பட்ட 90 கன்டெய்னர்கள் உள்ளன. இது பல கோடி மதிப்புள்ளது எனக் கூறப்படுகிறது. சரக்கு ரயில் மாயமாகியிருப்பதால், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஏற்றுமதியாளர்கள் மற்றும் கப்பல் ஏஜெண்ட்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனக் கருதப்படுகிறது.

பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏஜெண்டுகளும் கண்டெய்னர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

"சிஸ்டத்தில் ரயிலின் இருப்பிடம் தெரியாததால் ஏதோ தொழில்நுட்பத் தவறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதனால், ரயில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. கான்கோர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ரயிலைக் கண்டுபிடிக்க கடுமையாக உழைத்து வருகிறார்கள். விரைவில் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம்" என CONCOR நிறுவனத்தின் தலைமை மேலாளர் சந்தோஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com