மொபைல் ரீசார்ஜ் - பயன்படுத்துவதற்கு ஏற்றபடி கட்டணம் - ஏர்டெல், வோடபோன் தயார், ஆனால், தலையாட்ட மறுக்கும் ஜியோ!
மாதாமாதம் மொபைல் ரீசார்ஜ் செய்து அலுத்துவிட்டீர்களா? இந்தியாவில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னை ரீசார்ஜ் பிளானை புரிந்து கொள்வதுதான். ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு எதுவாக இருந்தாலும் பயன்பாட்டுக்கு ஏற்றபடி கட்டணம் அமைவதில்லை. பெரும்பாலும் பயன்பாட்டை விட அதிகமாக கட்டணம் செலுத்திக்கொண்டிருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒரு டெலிகாம் நிறுவனம் 42 ஜிபி, மாதம் 299 ரூபாய்க்கு அளிக்கிறது. பெரும்பாலும் 42 ஜிபி என்பது முழுமையாக பயன்படுத்தப்படபோவதில்லை. 10 ஜிபி போதும் என்றால் அதற்கேற்ற பிளான் சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனத்திடம் இல்லை. இதுதான் வாடிக்கையாளர்களிடையே பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
3 ஜிபி டேட்டாவை ஆக்டிவேட் செய்பவர்களுக்கு எல்லா நாட்களும் 3ஜி டேட்டா தேவைப்படப்போவதில்லை. சிலருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக பயன்பாடும், சிலருக்கு ஞாயிற்றுகிழமைகளில் பயன்பாடு குறைவாகும் இருப்பதால் இருவரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
மாதாமாதம் வாடிக்கையாளர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிவிடுவதுதான் நல்லது என்று வழக்கமான பாணியை பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் கையாளுகின்றன. ஆனால், எவ்வளவு பயன்படுத்துகிறோமோ அதற்கேற்றபடி கட்டணம் விதித்தால் டெலிகாம் வருவாயை பெரிய அளவில் பெருக்கும் என்கிறார்கள் தொலை தொடர்பு வல்லுநர்கள்.
பயன்பாட்டுக்கு ஏற்றபடி கட்டணம் என்பதுதான் அடுத்த கட்ட டிமாண்ட். அதை முன் வைத்துதான் எர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை திட்டமிட்டு வருகின்றன. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ அதற்கு நேர்மாறாக செயல்படுவதால் குழப்பம் நீடிக்கிறது.
அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் ஒன்று கூடி முடிவெடுத்தால் மட்டுமே இது சாத்தியம். யாருக்கு அதிகமான டேட்டா வேண்டுமோ அவர்கள் அதிகமாக கட்டணம் செலுத்தும் வகையில் இருக்கவேண்டும். தற்போதுள்ள ப்ரீ பெய்டு பிளான், தினமும் குறைந்தபட்சம் 1 ஜிபி டேட்டா முதல் 3 ஜிபி டேட்டா வரை தரும்படியான திட்டங்கள் உள்ளன.
மொபைல் டேட்டா என்பது எலெக்ட்ரிசிட்டி, தண்ணீர் போன்றதுதான். எலெக்ட்ரிசிட்டி, தண்ணீர் போன்றவற்றிற்கு மாதம்தோறும் அல்லது ஆண்டுதோறும் அடிப்படை கட்டணம் செலுத்தவேண்டும். அதற்கு பின்னர் பயன்பாட்டிற்கு ஏற்றபடி கட்டணம் விதிப்பதுதான் முறையானது.
அதே பாணியில் மொபைல் டேட்டாவுக்கும் ஒரு அடிப்படைக் கட்டணமும், பின்னர் பயன்பாட்டுக்கு ஏற்றபடி ஒரு கட்டணமும் விதிக்கப்படவேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் கோரிக்கை. எர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இது நியாயமான கோரிக்கை என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
ஏர்டெல், வோடபோன் போன்றவை இவ்விஷயத்தில் ஒரே கருத்தை கொண்டிருக்கின்றன. இனி ரிலையன்ஸ் ஜியோ என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்துதான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.