மோடி விசிட், மத்திய அமைச்சர்களின் அடுத்தடுத்த டிரிப்! தேர்தல் ஃபீவரில் கர்நாடகா. தயாராகிறதா பா.ஜ.க?
மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள் காரணமாக அனைத்து தரப்பினரும் பலனடைந்து வருகிறார்கள். எங்களது நோக்கம், வாக்கு வங்கியை பலப்படுத்தவது அல்ல. வளர்ச்சியை உறுதிப்படுத்துவது என்று கர்நாடகாவில் மோடி பேசியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம், கலபுர்கி மாவட்டத்தில் நேற்று (19/01/2023) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாரா சமூகத்தினருக்கு நில உரிமைக்கான பட்டாக்களை வழங்கி பேசினார். அங்கு கூடியிருந்த கூட்டத்தினரை உற்சாகப்படுத்த ட்ரம்ஸ் இசைத்துக் காட்டினார்.
பழங்குடியினர் நலனுக்கு அரசு முன்னுரிமை அளித்திருப்பததோடு, வங்கிக் கணக்கு திட்டம் நிதி சேவையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக பேசிய பிரதமர், மக்கள் நல திட்டங்களையும் பட்டியலிட்டார்.
தேர்தலை மனதில் கொள்ளாமல், மக்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல்வேறு திட்டங்களை தன்னுடைய அரசு அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் பிரதமர் பேச்சில் குறிப்பிட்டார்.
வழக்கம்போல் ஏராளமான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளும் நடந்தன. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 11 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளுக்கு வெறும் 3 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு இருந்ததாகவும் தெரிவித்தார்.
கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் ஆரம்பித்திருப்பதால் பிரதமர் முதல் மத்திய அமைச்சர்களும் பெங்களூருக்கு அடிக்கடி பறந்து வர ஆரம்பித்துள்ளார்கள். கர்நாடகாவுக்கு வரும் மத்திய அமைச்சர்களும் மாநில அரசின் செயல்பாடுகளை விட மத்திய அரசின் திட்டங்களையே மையப்படுத்தி பேசி வருகிறார்கள்.
சென்னை, மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பற்றி நிதின் கட்கரி பேசினார். டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி ஒரு மத்திய அமைச்சர் பேசினால், அடுத்த நாளே ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி பற்றி இன்னொரு அமைச்சர் பேசுகிறார். 350 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்தநிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 75 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்திருப்பதாக ஜிதேந்திர சிங் பேசியிருக்கிறார். தேர்தல் பீவர், இன்னும் ஆறு மாதம் தொடரும்!