சமஸ்கிருதத் தேர்வில் முதலிடம் பெற்ற முஸ்லிம் மாணவன்!
உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த முகமது இர்பான், தனது 12 ஆம் வகுப்பு சமஸ்கிருத சிக்ஷா பரிஷத் வாரியத்தின் உத்தர் மத்யமா-2 தேர்வில் 82.7% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், சந்தௌலியில் விவசாயத் தொழிலாளியின் மகனான முகமது இர்பான் தன்னுடன் தேர்வெழுதிய 14,000 மாணவர்களை முந்திக் கொண்டு சமஸ்கிருதப் பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளமை அம்மாநில ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டினைப் பெற்றுத் தந்துள்ளது.
உ.பி சமஸ்கிருத சிக்ஷா பரிசத் வாரியம் மற்ற பாடங்களுடன் சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கியத்தை இரண்டு கட்டாயப் பாடங்களாகக் கொண்டுள்ளது.
சமஸ்கிருத ஆசிரியராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் 17 வயது இர்பான், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 20 மதிப்பெண்கள் பெற்ற ஒரே இஸ்லாமியர் ஆவார்.
இர்பானைப் பற்றிப் பேசுகையில் அவரது தந்தை சலாவுதீன் கூறியது என்னவென்றால், ஜிந்தாஸ்ஸ்பூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயக் கூலியான நான், என் மகனை வேறு தனியார் பள்ளிகளில் சேர்த்து அவர்கள் கேட்கும் கட்டணத்தைச் செலுத்த முடியாத காரணத்தால், என் குடும்ப நிலைக்குத் தகுந்தவாறு என் மகன் இர்பானை சம்பூர்னானந்து சமஸ்கிருத அரசுப் பள்ளியில் சேர்த்தேன். என் வருமானத்தில் இந்தப் பள்ளிக்கு மட்டுமே என்னால் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலையில் நான் இருந்தேன். என் மகன் இர்பான் மிக நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன். நான் ஒரு விவசாயக் கூலி என்பதால் எனக்கு தினசரி 300 ரூபாய் கூலி கிடைக்கும். மாதந்தோறும் சில நாட்கள் மட்டுமே எனக்கு வேலை இருக்கும். எனவே அவனை வேறு தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைக்க என்னால் முடியவில்லை.
ஆனால், என் மகனுக்கு அவனை நான் பள்ளியில் சேர்த்த முதல் நாளில் இருந்தே சமஸ்கிருதத்தின் மீது மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். எங்கள் வீட்டில் வசதிக்குறைவு தான். குறைந்த பட்ச வசதிகள் கூட இல்லை. அரசு உதவியுடன் கான்கிரீட் கொண்டு பக்கா வீடு (Pucca House) கட்டிக் கொள்வதற்கே ஒரு மாதத்திற்கு முன்பு தான் பணம் கிடைத்தது. அதைப் பற்றியெல்லாம் எந்தக் குறைபாடும் இல்லாமல் என் மகன் அவரது படிப்பின் மீது மட்டுமே கவனமாக இருந்தார்.
மக்கள் ஏன் ஒரு மொழியை அவர்களது மதத்துடன் இணைத்துப் பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என் மகனுக்கு சமஸ்கிருதம் ஜூனியர் வகுப்புகளில் கட்டாயப் பாடமாக இருந்தது. அத்துடன் இர்பானுக்கு சமஸ்கிருதம்
கற்றுக் கொள்ள ஆரம்பத்தில் இருந்தே மிகுநஆர்வமும் இருந்தது. ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதானால் ஒரு இந்துவால் உருது மொழியைக் கற்றுக்கொள்வதில் மிகச்சிறந்தவராக விளங்க முடியும். அதே போலத்தான் முஸ்லிம்களால் சமஸ்கிருதம் கற்றுக் கொள்வதில் சிறந்தவராக விளங்க முடியும். ஆகவே, என் மகனது கனவைத் தொடர என் குடும்பம் மிகுந்த ஆதரவுடன் இருக்கும்.
அடுத்தபடியாக இர்பான் சாஸ்திரி (BA க்குச் சமம்) அதைத் தொடர்ந்து ஆச்சார்யா (MA க்குச் சமம்) படிக்கத் திட்டமிட்டுள்ளார். பின்னர் அவர் சமஸ்கிருத ஆசிரியராகத் தகுதி பெற்ற பின் அதற்கான வேலையைத் தேடுவார். என்று சலாவுதீன் கூறினார்.