சேலத்திற்கும் வந்து விட்டதா உருமாறிய கொரோனா.

விழிப்புணர்வு
சேலத்திற்கும் வந்து விட்டதா  உருமாறிய கொரோனா.

சீனாவில் இருந்து பரவி வரும் உருமாறிய புதிய வகை கொரோனாவான பி எப் -7 இந்தியாவிலும் பரவாமல் இருக்க அரசு அதி தீவிர நடவடிக்கை எடுத்து வருவதை அறிவோம். இதையடுத்து வெளிநாட்டில் இருந்து விமானங்களில் பயணித்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கும் சீனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள விமானநிலையங்களிலும் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

       கோவை விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்கு நேரடி விமான சேவை இல்லை. இருந்தாலும் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வரும் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரியும் ஒருவர். அவருடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தனது குடும்பத்துடன் கோவை விமான நிலையம் வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவருக்கு கோவை மாநகரத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

      மேலும் அவருக்கு எந்த வகையான கொரோனா என்பது குறித்து அறிய அவரது சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கும் அனுப்பி   சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து  வருகின்றனர். இது குறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வசிக்கும் ஊரான மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் அவரை தினமும் இரு வேளையும் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன் அவரின் குடும்பத்தாரையும் தனிமைப் படுத்தி (பரிசோதனையில்  தொற்று இல்லை எனினும்) மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

இது தவிர அந்நபரின் வீடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ளவர்களையும் எச்சரிக்கை செய்து யாரேனும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனரா என்றும் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தும் நோய் குறித்த விழிப்புணர்வை ஒலிபெருக்கியில் அறிவித்தும் வருவதாக சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

      மேலும் அந்த ஜவுளி வியாபாரியுடன் விமானத்தில் பயணம் செய்த 167 பயணிகளின் பட்டியலும் வாங்கப்பட்டு அவர்கள் வசிக்கும் பகுதி சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களையும் தனிமைபடுத்திக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.   

     இது குறித்த செய்தி சேலம் மக்களுக்கு அதிர்ச்சி என்றாலும் நோய் பரவும் விழிப்புணர்வும் தந்து மாஸ்க் அணிவது கிருமிநாசினி பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com