"என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது" உதவி கேட்ட மேரி கோம்!

"என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது" உதவி கேட்ட மேரி கோம்!

மணிப்பூரில் மெய்டிஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறை வெடித்ததை அடுத்து தலைநகர் இம்பால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவை முடக்கிவைக்கப்பட்டுள்து. அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் 4,000-த்தும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் அஸ்ஸாம் ஆயுதப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக குவாஹாட்டியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ராணுவ அதிகாரி லெப்.கர்னல் மகேந்தர் ரவால் தெரிவித்தார்.நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியது. வன்முறை நடந்த பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின சமூகங்களும் பழங்குடி அல்லாத சமூகங்களும் உள்ளன. மணிப்பூரில் தற்போது பாஜக தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இங்கு பிரேன் சிங் முதலமைச்சராக உள்ளார். 

இந்நிலையில், அம்மாநிலத்தின் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களை பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைந்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த அகில பழங்குடியினர் மாணவர்கள் சங்கம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டன. எனினும் நாங்கள் ஆர்ப்பாட்டம் பேரணி நடத்தினோமே தவிர வன்முறையில் ஈடுபடவில்லை என்று மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர். மாணவர்கள் சங்க பேரணி அமைதியாகத்தான் நடந்தது. ஆனால், அதற்கு பிறகு சிலர் சூரசந்த்பூரில் உள்ள ஆங்கிலோ-குகி போர் நினைவு சின்ன நுழைவு வாயிலை தீயிட்டு கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனர் என்றார் மாணவர் சங்கத் தலைவர் படின்தாங் லூபெங்.

இம்பால் மற்றும் வேறு சில இடங்களில் கிறிஸ்தவ தேவாலங்களும் பழங்குடியினர் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. போலீஸார் வன்முறையாளர்களைக் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று லூபெங் புகார் கூறினார்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் சிலர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்த்தாகவும் லூபெங் தெரிவித்தார். நிலைமை மோசமாக இருப்பதாகவும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசையும், அமைதியை நிலைநாட்டுமாறு பழங்குடியினரையும் மாணவர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

சமூகத்தில் இரு பிரிவினருக்கு இடையே இருந்த தவறான புரிதல்தான் மோதல், வன்முறைக்கு காரணமாகும் என்று தெரிவித்த முதல்வர் பைரேன் சிங், பழங்குடியினர் கோரிக்கைகள் பரிசீலித்து தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார்.

மெய்டிஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருவோர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் உள்ளனர். இதனால் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறிவருகின்றனர்.

இம்பால், சூரசந்த்பூர், விஷ்ணுபூர், காங்போக்பி மற்றும் மரோ ஆகிய இடங்களில் வன்முறை மற்றும் கலவரங்கள் நடந்ததாகவும் ஏராளமான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் முதல்வர் சிங் தெரிவித்தார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மத்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இதனிடையே பா.ஜ.க.வினரின் வெறுப்பூட்டும் அரசியல்தான் இருபிரிவினரிடையே நடந்த மோதலுக்கு காரணம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

பா.ஜ.க. இரு வகுப்பாரிடையே மோதலை தூண்டிவிட்டுள்ளது. மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூரசந்த்பூரில் கடைகள், வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சாலையில் மக்கள் நடமாட்டத்தையும் காண முடியவில்லை. வன்முறை நடந்த இடம் போர்க்களம் போல் காணப்பட்டது. குக்கி இன மக்கள் வீடுகளும் கிறிஸ்துவ தேவாலயங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன என்று பெயர் குறிப்பிட விரும்பாத பழங்குடியின குக்கி சமூகத்தின் அரசியல்வாதி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து குத்து சண்டை விளையாட்டின் மூலம் நாட்டிற்கு பெருமைச் சேர்ந்த ஓலிம்பிக் வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்துள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com