வேலை நேரத்தில் அரட்டை வேண்டாம்! அதிகாரியின் எச்சரிக்கைக்கு கண்டனம்!
ஒரு நிறுவனத்தின் மேலதிகாரி, தனது ஊழியர்களுக்கு நோட்டீஸ் போர்டு மூலம் விடுத்த கடும் எச்சரிக்கையை அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பகிர்ந்து கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பையும் பயனாளர்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த மேலதிகாரி அப்படி என்னதான் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலே படியுங்கள்.
அந்த விடியோவில், “நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் கவனிக்கவும். வேலைநேரம் என்பது வேடிக்கை செய்வதற்கான நேரம் அல்ல. இது உங்களுக்கான வேலை. வேலை நேரத்தில் வேலைக்கு தொடர்பில்லாதவை குறித்து பேச வேண்டாம், விவாதிக்க வேண்டாம். வேலை நேரத்தில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க வேண்டாம். தொலைபேசி எண்களை பரிமாறிக் கொள்வது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது போன்றவற்றை வேலை நேரம் முடிந்தபிறகு வைத்துக் கொள்ளுங்கள். சக ஊழியர்கள் எவராவது வேலை நேரத்தில் அரட்டை அடித்து வீண்பேச்சு பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தால் அதுபற்றி எனக்கு தகவல் தெரிவியுங்கள்” என்று குறிப்பிட்டு அதன் கீழ் கையெழுத்திட்டு ஒரு கார்ட்டூனையும் வெளியிட்டிருந்தார்..
இந்த விடியோ வெளியானதை அடுத்து 26,000 பேர் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அவரை நச்சுப்பாம்பு என்று சிலர் வர்ணித்ததுடன் அந்த நிறுவனத்தின் ஆரோக்கியமற்ற வேலை கலாசாரத்தையும் கடுமையாக சாடியுள்ளனர்.
ஒரு ஊழியர் வேலையை ரசனையுடன் செய்யும்போது உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “உங்கள் எச்சரிக்கை நோட்டீஸில் வெளியிட்டுள்ள கார்ட்டூன் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நாங்கள் வேடிக்கையானவர்கள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாமவர் “நிர்வாகத்தின் கவனத்துக்கு… வேலை செயல்வதற்கு நல்ல சூழல் தேவை. இதுபோன்ற கார்ட்டூன்கள் வைப்பதை தயவு செய்து தவிர்த்திடுங்கள், வேண்டுமானால் வரைபடத்தை பயன்படுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனக்கும் உங்களைப் போன்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். வேலையில் எங்களை பிழிந்து எடுத்துவிடுவார். உங்கள் நிறுவன ஊழியர்கள் நல்லதொரு சூழலில் வேலையில் வேலை ரசித்து செய்தால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.