"தேசத்தின் சேவை நின்றுவிடக்கூடாது" - தாயார் இறந்த நாளில் பிரதமர் மோடி சொன்னது!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆமதாபாதில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு ஆமதாபாத்துக்கு விரைந்து வந்த பிரதமர் மோடி, ஆழ்ந்த வருத்தத்துடன் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தார்.

தனது தாயார் ஹீரா பென்னின் மறைவு, தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாக இருந்த நிலையிலும் பிரதமர் மோடி திட்டமிட்டபடி மேற்கவங்கத்தில் ஹெளராவிலிருந்து ஜல்பைகுரி வரை செல்லும் வந்தேபாரத் ரயிலை விடியோகான்பிரன்சிங் மூலம் இயக்கிவைத்தார்.

“நான் இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், தனிப்பட்ட காரணங்களால் என்னால் வரமுடியவில்லை. இதற்காக மேற்கு வங்க மக்களாகிய உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” என்று மோடி உரையைத் தொடங்கினார்.

பின்னர் டிசம்பர் 30 ஆம் தேதியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு அவர் பேசுகையில், தேசிய கீதம் உருவான இந்த மண்ணில்தான் இன்று வந்தே பாரத் ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 1943 ஆம் ஆண்டு இதே நாளில்தான் (டிசம்பர் 30) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அந்தமானில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து இந்தியாவின் விடுதலையை அறிவித்தார். 2018 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன வரலாற்று நிகழ்வின்போது நான் அந்தமானில் இருந்தேன். நேதாஜிக்காக ஒரு தீவை அர்ப்பணித்தேன்.

மேற்குவங்கத்தில் ரூ.5,000 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளன. கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.600 செலவிடப்படும்.

இந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்திய ரயில்வேயின் வளர்ச்சி முக்கியமானது. இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் வேலைகள் அதிவேகத்தில் நடந்து வருகின்றன.

2014 ஆம் ஆண்டுக்கு முன் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் 24-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ பணிகள் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 800 கி.மீ. தொலைவுக்கு ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது வரும் காலங்களில் 1,000 கி.மீ. என்ற அளவில் விரிவுபடுத்தப்படும்.

உலகமே இந்தியா மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளது. நாம் ஒன்றுபட்டு சேவை செய்தால்தான் இதை நிரூபிக்க முடியும். தேசத்தை கட்டமைப்பதில் ஒவ்வொரு இந்தியரும் தனது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிடத்தையும் நாம் தேசத்தை கட்டமைக்க செலவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த சேவை நின்றுவிடக்கூடாது என்றார்.

பிரதமர் மோடி ஆமதபாதுக்கு புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே அவரது அலுவலகத்திலிருந்து மோடி பங்கேற்கும் எந்த ஒரு நிகழ்ச்சியும் ரத்துச் செய்யக்கூடாது என்று தகவல் பறந்தது. மோடியின் குடும்பத்தினரும் திட்டமிட்டபடி பணிகளைச் செய்வதுதான் ஹீரா பென்னுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும் என்று தெரிவித்தார்களாம்.

“தாயாரின் மறைவு உங்களுக்கு மிகுந்த துயரத்தை கொடுத்திருக்கும். கடவுள் உங்களுக்கு பலத்தை கொடுக்க பிரார்த்திக்கிறேன். உங்களது பணி தொடரட்டும். இந்த துயரமான சூழலிலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com