பணமதிப்பிழப்பு நடவடிக்கை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி “பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்று  பிரதமர் நரேந்திர மோடியின்  தலைமையிலான பா.ஜ.க. அரசு அறிவித்தது.  

பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பால் பொது மக்கள்  மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.  வீட்டில் வைத்திருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை என்னசெய்வதென்று தெரியாமல் பொது மக்கள் தவித்தனர். பின்னர் வங்கியில் கால்வலிக்க வரிசையில் நின்று பணத்தை மாற்றிக் கொண்டனர்.

ஏடிஎம்.மிலும் பணம் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதாக இருந்தது. எல்லா ஏடிஎம்.மிலும் பணம் எடுக்க கூட்டம் அலைமோதியது. வரிசையில் நின்ற பொதுமக்கள் மீது போலீஸ் தடியடியும் நடத்தியது. ஒருசிலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது.

ஒன்றிய அரசின் இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து 58 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

இவ்வழக்கின் விசாரணையில் ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் அட்டனி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி மற்றும் மனுதாரர்கள் தரப்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பா.சிதம்பரம், மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் உள்ளிட்டோர் வாதங்களை முன்வைத்தனர். 

உரிய திட்டமிடல் ஏதும் இன்றி ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே பண மதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது? பல்வேறு தரப்பினரும் இதில் பாதிக்கப்பட்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தேசத்தை கட்டமைக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபடும்போது இதுபோன்ற சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும்.  அது விரைவில் சரிசெய்யப்பட்டு விடும்.   தற்காலிக சிரமத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என ரிசர்வ் வங்கி தரப்பில் வாதிடப்பட்டது.

வரி ஏய்ப்பு, கருப்பு பணம், தீவிரவாதத்திற்கு நிதியளித்தல், கள்ள நோட்டு போன்றவற்றிற்கு எதிரான தொலை நோக்குப் பார்வையுடைய திட்டமே பணமதிப்பு நீக்க நடவடிக்கை என ஒன்றிய அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில்,  இன்று  தீர்ப்பு வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறை முடிந்த பிறகு முதல் வழக்காக நீதிபதிகள், எஸ்.ஏ.நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபன்னா, வி. ராமசுப்பிரமணியன், பி.வி. நாகரத்னா அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

நாட்டு நலனுக்கா அரசு சில சமயங்களில் இது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. இதில் எந்த தவறும் இல்லை. அதனால் மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியே என்று தீர்ப்பு கூறினர். இதற்கு எதிராக தொடர்ந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com