சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைக் கண்காட்சி மேளா!

சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைக் கண்காட்சி மேளா!

சூரஜ்குண்ட் தெற்கு டெல்லியிலிருந்து 8 கி.மீ  தொலைவில் ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகர ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள 10  ஆம் நூற்றாண்டின் ஒரு பண்டைய நீர்த்தேக்கமாகும். சூரஜ்குண்ட் ('சூரியனின் ஏரி' ) என்பது ஆரவல்லி மலைகளின் பின்னணியில் அரைவட்ட வடிவில் சூரிய உதயம் போல் கட்டப்பட்ட  ஒரு செயற்கை குண்ட் ('குண்ட்' என்றால் "ஏரி" அல்லது நீர்த்தேக்கம்). இது பத்தாம் நூற்றாண்டில் தோமாரா வம்சத்தைச் சேர்ந்த மன்னர் சூரஜ்பால் என்பவரால் கட்டப்பட்ட சூரிய வழிபாட்டுக் கோவில் எனக் கூறப்படுகிறது. டெல்லியின் ஆட்சியாளரான அனங்பால் தோமரின் இளைய மகனான இவர் ஒரு சூரிய பக்தராக இருந்தார்,  

சமீபத்தில் நாங்கள் சூரஜ்குண்டுக்கு சுற்றுலாப் பயணமாக சென்று வந்தோம். நாங்கள் சென்ற சமயம்  கூட்டம் அதிகமில்லை.  நுழைவு டிக்கெட்டைப் பெற டிஜிடல் பேமெண்ட் மூலமாகத் தான் பெறமுடியும். சூரஜ்குண்டில் அரை வட்ட சூரிய வடிவ பழைய கால ஏரியையும் அதன் அருகிலுள்ள சித்தகுண்ட் பாறைகளிலிருந்து பெருக்கெடுத்து வரும் நீரையும் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். பயணிகள் தங்குவதற்கு நிறைய ரிசார்ட்டுகள்  இங்கு உள்ளன.

      சூரஜ்குண்ட் மேளா என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய கைவினைக் கண்காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது.  சூரஜ்குண்ட் மேளா ஆணையம் மற்றும் ஹரியானா சுற்றுலா மையம் இணைந்து இந்த மேளாவை ஏற்பாடு செய்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அழகான கலை மற்றும் கைவினைப்பொருட்களின் சிறப்பான வடிவமைப்புகளை வாங்க ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த வருடம் பிப்ரவரி மூன்றாம் தேதியன்று  குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவர்கள் 36வது சூரஜ்கண்ட் சர்வதேச கைவினை மேளாவைத் தொடங்கி வைத்தார். இந்த மேளா பிப்ரவரி 19 வரை நடைபெற உள்ளது. இந்த வருட கண்காட்சி இந்தியாவின் கைவினைப் பொருட்கள் கைத்தறி மற்றும் பாரம்பரியங்களின் செழுமையை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.  அனைத்து மாநிலங்களும் பல வெளிநாடுகளும் கண்காட்சியில் பங்கேற்று தங்கள் கலைகள் , உணவு, பாரம்பரிய உடை, மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வணிக ரீதியாகவும் பயன் பெறும். அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் போன்ற மாநிலங்களின் சிறப்பு ஸ்டால்கள் உள்ளன.   

டெல்லியிலிருந்து  சூரஜ்குண்டு செல்ல பேருந்து வசதிகள் உண்டு. விமானத்தில் பயணம் செய்பவர்கள் டெல்லி விமான நிலையத்திலிருந்து  வாடகை வண்டியில் செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com