மாநிலம் விட்டு மாநிலம் இறந்த மனைவியை தோளில் சுமந்து நடக்கத் தொடங்கிய கணவர்!

மாநிலம் விட்டு மாநிலம் இறந்த மனைவியை தோளில் சுமந்து நடக்கத் தொடங்கிய கணவர்!

டிசா மாநிலம், கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி ஈடே குரு. இவரது கணவர் சாமுலு. இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு ஈடே குருவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் விசாகா மாவட்டம், தகரபுவலசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரமாகியும் அவரது உடல் நிலையில் முன்னேற்றமே ஏற்படவில்லை. அதேநேரம் கணவர் சாமுலு கையில் இருந்த பணம் அனைத்தும் செலவாகிக் கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் கையில் இருந்த பணம் முழுக்க செலவாகிவிட்டதால் தனது மனைவியை டிஸ்சார்ஜ் செய்து தனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவர் விரும்பினார்.

ஆந்திராவில் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து அவர்களது சொந்த கிராமம் சுமார் 145 கி.மீ. தொலைவு என்பதால், ஒரு ஆட்டோ பேசி அதில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பினார். அந்த ஆட்டோ விஜயநகரம் மாவட்டம், கந்தியாடா மண்டலம் ராமாவரம் வந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது மனைவி இறந்து விட்டார். அதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர், ‘இறந்துவிட்ட பெண்மணியை தனது ஆட்டோவில் அழைத்துக்கொண்டு செல்ல முடியாது’ என்று கூறி அவர்களை ஆட்டோவை விட்டு இறக்கி விட்டுவிட்டார். ஒருபுறம் மனைவி இறந்துவிட்ட அதிர்ச்சி, மறுபுறம் நடுவழியில் தங்களை ஆட்டோ ஓட்டுநர் இறக்கி விட்ட சோகம் என, மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் சாமுலு நடுரோட்டில் திகைத்து நின்றுள்ளார். கையில் பணமும் இல்லை, அந்த ஊர் மொழியும் தெரியாததால் குழம்பிப் போன சாமுலு என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்துள்ளார்.

அங்கிருந்து சாமுலு தனது சொந்த கிராமத்துக்குப் போன இன்னும் 115 கி.மீ. தொலைவு கடக்க வேண்டும். குழப்பத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் சாமுலு இறந்துவிட்ட தனது மனைவி தோளில் சுமந்து கொண்டு எங்கே செல்கிறோம் என்றே தெரியாமல் நடக்கத் தொடங்கி உள்ளார். இப்படி நான்கு கி.மீ. தொலைவு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதைக் கவனித்த பொதுமக்கள், காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். விஷயத்தை அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து சாமுலுவுக்கு உதவி உள்ளனர். மிகவும் சோர்ந்து காணப்பட்ட சாமுலுவுக்கு முதலில் சாப்பிட உணவு கொடுத்துள்ளனர்.

அதன் பின்னர் அவருக்கு ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து கொடுத்து, சாமுலுவையும் இறந்த அவரது மனைவியின் உடலையும் அதில் ஏற்றி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழியில் ஏதும் பிரச்னை வராமல் இருக்க ஆந்திரா மற்றும் ஒடிசா எல்லை காவல் துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். இறந்த மனைவியை தனது தோளில் சுமந்து செல்ல முயன்ற கணவர் சாமுலுவுக்கும் அவருக்கு உதவிய காவல் துறைக்கும் அனைவரும் தங்களது நெகிழ்ச்சியான பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com