புதிய நாடாளுமன்றம் குறித்து முதல் முறையாக ரியாக்ட் செய்துள்ள குடியரசுத் தலைவர்!

புதிய நாடாளுமன்றம் குறித்து முதல் முறையாக ரியாக்ட் செய்துள்ள  குடியரசுத் தலைவர்!

புதிய நாடாளுமன்ற வளாகம் திறக்கப்பட்டுள்ளதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவேற்றுள்ளார். நாடாளுமன்றத்தின் நம்பிக்கை சின்னமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அதை திறந்துவைத்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பது சரியல்ல, அதை குடியரசுத் தலைவர்தான் திறந்துவைத்திருக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்துள்ள நிலையில், புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளது குறித்து குடியரசுத் தலைவர் திருப்தியும் மகிழ்ச்சியும் வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள்தான், அரசியலமைப்புச் சட்டத்தின் நாயகர்கள். அந்த வகையில் நாடாளுமன்றத்தின் நம்பிக்கை சின்னமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, புதிய நாடாளுமன்றத்தை திறந்துவைத்துள்ளது மிகவும் பொருத்தமானதாகும். இது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்துகிறது என்று திரெளபதி முர்மு தனது செய்தியில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவரது செய்தியை வாசித்து வெளியிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா என்பது ஜனநாயக பயணத்தில் ஒரு மைல்கல்லாகும். பல கோடி இந்தியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியதற்கு சாட்சி நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள்தான். ஜனநாயக மரபுகளை கட்டிக்காப்பதிலும், மக்களின் நம்பிக்கை ஒளிவிளக்காகவும் திகழ்வது நாடாளுமன்றம்தான். எனவே புதிய நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்றும் திரெளபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்துள்ளதன் மூலம் குடியரசுத் தலைவருக்குள்ள உரிமையை பிரதமர் மோடி பறித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நாளிலேயே எதேச்சாதிகாரமான முறையில் மல்யுத்த வீராங்கனைகள் போலீஸாரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். ஜனநாயகம், தேசியம், மகள்களை காப்போம் என்று பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கூறிவருவது வெறும் பொய் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகம் என்பது கட்டடம் கட்டுவது மட்டுமல்ல, மக்களின் குரலை கேட்டு செயல்பட வேண்டும். இது மோடிஜிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிட்டபோது அதை எதிர்த்தவர்கள் இன்று அவரை முன்னிருத்தி பேசுவது ஏன் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா கேள்வி எழுப்பினார். கடந்த 75 ஆண்டுகளில் எதிர்க்கட்சியினர் பழங்குடியின மக்களுக்கு செய்தது என்ன என்றும் அவர் கேட்டார்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நடந்தவைகளை பார்த்தேன். நல்லவேளையாக அதில் கலந்துகொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட சிலருக்காக நடந்த விழா போல் தெரிகிறது. அங்கு நடந்த சம்பவங்கள் எனக்கு கவலை அளிக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு முடசூட்டு விழாபோல் இருந்தது என்று ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் ஆட்சியில் போடப்பட்ட அவசர சட்டங்கள்தான் அதிகம். நாடாளுமன்ற குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே ஒத்திவைக்கப்பட்ட சம்பவமும் மோடியின் ஆட்சி காலத்தில்தான் நடந்துள்ளது. நான்கு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் மக்களவைக்கு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com