3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி இருந்த பெண், மகனுடன் மீட்பு!
ஹரியாணா மாநிலம் குருகிராமில் பெண்மணி ஒருவர் தன் 10 வயது மகனுடன் மூன்று ஆண்டுகளாகவே வீட்டுக்குள் அடைந்து கிடந்திருக்கிறார். காரணம் அவருக்கு இருந்த கொரோனா பீதி. கொரோனா பயம் குறைந்து மக்கள் சகஜமாக நடமாடத் தொடங்கி அவரவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி பல மாதங்களாகின்றன. ஆனால், இன்று வரை அப்பெண்மணி தனக்கிருந்த கொரோனா பயத்தை வென்றதாகத் தெரியவில்லை.
குருகிராமைச் சேர்ந்த சக்கர்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் காவல்துறையை அணுகித் தன் மனைவி மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் தன் மனைவி கொரோனா பீதி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே பூட்டிக் கொண்டு வசிப்பதாகவும், தனது 10 வயது மகனையும் வீட்டை விட்டு வெளியேற அவர் அனுமதிப்பதில்லை என்றும் கூறியிருந்தார்.
அத்துடன் கொரோனா பாதிப்பு தொடங்கிய ஆரம்ப நாட்களில் இது பாதுகாப்புக்காகத் தான் என்று தான் எண்ணியதாகவும் ஆனால் தொடர்ந்து மூன்று வருடங்களாக மனைவி அந்த நடைமுறையையே பின்பற்றி வருவது தனக்கு மிகுந்த மனக்கவலையை அளித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தன் மனைவி இன்றும் கூட தன்னை அந்த வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை என்றும், வெளியில் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் என்னால் கொரோனா பரவி விடும் என்று அவர் பயத்தில் இருக்கிறார். அதன் காரணமாக என்னை வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்க வைத்து வருகிறார். இனிமேல் அது தன்னால் இயலாது. ஒன்று மனைவி தன்னையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் அல்லது வீட்டுக்குள் இருக்கும் தனது 10 வயது மகனை என்னுடன் வெளியில் அனுப்ப வேண்டும் இதுவே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்’ என்று அவர் கூறி இருந்தார்.
அவரது புகாரை ஏற்ற ஹரியானா காவல்துறையினர் அந்தப் புகாரின் அடிப்படையில் குருகிராமில் அவர் அளித்த முகவரியில் மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி இருந்த அவரது மனைவியையும், மகனையும் மீட்டனர். தற்போது காவல்துறை கண்காணிப்பின் கீழ் இருக்கும் அப்பெண்மணிக்கு மனநல சிகிச்சை அளிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்திருப்பதாகத் தகவல்.