இதற்காகத்தான் ராகுல் ஒற்றுமை யாத்திரை நடத்தினார்: நிதின் கட்கரி கிண்டல்!

இதற்காகத்தான் ராகுல் ஒற்றுமை யாத்திரை நடத்தினார்: நிதின் கட்கரி கிண்டல்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் முயற்சியாக நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரை நடத்தினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய அவரது ஒற்றுமை யாத்திரை கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரில் முடிவடைந்தது.

ராகுலின் யாத்திரைக்கு கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள். அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீர்ர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

நிறைவுநாள் நிகழ்ச்சிக்கு 23 அரசியல்கட்சிகளுக்கு ராகுல் அழைப்பு விடுத்திருந்தாலும் திமுக, மெஹ்பூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி, தேசியமாநாடு கட்சி உள்ளிட்ட 9 கட்சிகளே இதில் பங்கேற்றன. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் நேரில் பங்கேற்காவிட்டாலும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் எழுச்சிப் பயணம் என்று காங்கிரஸ் கூறிவந்தாலும், உட்கட்சி பூசலை தீர்க்கமுடியாத காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை நடத்துவது ஏன் என்று பா.ஜக. கடும் விமர்சனங்களை முன்வைத்தது.

இதனிடையே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, ராகுலின் ஒற்றுமை யாத்திரையை கிண்டல் செய்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில், ராகுலின் ஒற்றுமை யாத்திரையை நான் பார்க்கவில்லை. பா.ஜ.க. வெறுப்புணர்வைத் தூண்டிவருவதாக ராகுல் கூறியுள்ளார். அவர் பேசுவதில் உண்மை இல்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு யார் மீதும் பாரபட்சம் காட்டவில்லை. அனைத்து மக்களின் நலன்களுக்காக அவர் செயல்பட்டு வருகிறார். நாடு முழுவதும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்தபோது ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என்று பார்த்தா நாங்கள் செயல்பட்டோம் என்று கேள்வி எழுப்பினார்.

நான் ராகுலின் பாரத் ஜடோ யாத்திரையை பார்க்கவில்லை. நான் அதிக உடல் எடையுடன் இருந்தபோது மருத்துவர்கள் என்னிடம் அதிகம் நடக்குமாறு அறிவுறுத்தினார்கள். அதுபோல் இப்போது ராகுலுக்கு யாராவது எடையை குறைக்குமாறு அறிவுரை கூறியிருக்கலாம். அதன் காரணமாகவே இந்த யாத்திரை நடந்திருக்கலாம் என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

வாக்குவங்கி அரசியலுக்காக காங்கிரஸ் மக்கள் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தி வருகிறது. உண்மை என்னவென்றால் பிரதமர் மோடி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக்க் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றார்.

மத்திய பட்ஜெட் மோடியின் நண்பர்களுக்கான பட்ஜெட்.இதில் ஏழைகளுக்கான எந்த திட்டமும் இல்லை என்று ராகுல் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, “ராகுல் கூறும் கருத்து பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இந்த ஆண்டு பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாகும்” என்று பதில் கூறினார் நிதின் கட்கரி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com