டெனிம் ஸ்கர்ட், டி ஷர்ட் அணிந்து தில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த இரு ஆண்கள்!
விதம் விதமான டிசைன்களில் ஆடை அணிவதற்கு எல்லையே இல்லை. இப்போதெல்லாம் ஆண்களைப் போல பெண்களும் பேன்ட், டி ஷர்ட் அணிவதைப் பார்க்கிறோம், ஆண்களும் இப்போது மெல்ல மெல்ல பெண்களுக்கு மட்டுமே உரித்தானவற்றை அணிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கெனவே ஆண்கள் காதில் தோடு அணிந்து வருகின்றனர்.
சமீபகாலமாக ஆண்களும் பெண்களுக்கு நிகராக ஒப்பனை செய்து கொள்வதும், ஆடை அணிவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் இளம் ஆடவர்கள் இருவர் பெண்களைப் போல ஸ்கர்ட் உடை அணிந்து தில்லி மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.
இது தொடர்பான விடியோவை சமீர்கான் என்பவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் அவரும் அவரது நண்பரும் டி ஷர்ட் மற்றும் டெனிம் ஸ்கர்ட் அணிந்துகொண்டு தில்லி மெட்ரோவிற்குள் செல்வதும் அதை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதுமான விடியோ வெளியாகியுள்ளது. “மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க நாங்கள் தில்லி மெட்ரோவில் ஸ்கர்ட் அணிந்து பயணிக்கிறோம்” என்று விடியோவின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விடியோவுக்கு இன்ஸ்டாகிராமில் பலரும் வரவேற்று பதிலளித்துள்ளனர். ஸ்கர்ட் அணிந்து சென்ற அந்த இருவரின் ஸ்டைல் உணர்வையும் மற்றும் அவர்களின் நம்பிக்கையை பாராட்டியுள்ளனர். “இது மிகவும் ஸ்டைலானது செளகரியமானது. இதை ஏன் மற்றவர்கள் அணியக்கூடாது என்று பார்க்க வேண்டாம்” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆண்களுக்கு மிஞ்சிப் போனால் ஷர்ட்டும்
பேன்டும்தான். இந்த ஸ்கர்ட் டிரஸ்ஸையும் வழக்கப்படுத்திக் கொண்டால் என்ன? என்று மற்றொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
எப்போது வழக்கமான உடை அணிவதிலிருந்து மாறுப்பட்ட இந்த ஸ்கர்ட் உடை பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
இது ஒன்றும் மோசமான யோசனை அல்ல. புதிய பேஷன்களை கடைப்பிடிக்க ஆண்களுக்கும் உரிமை உள்ளது என்று மூன்றாமவர் குறிப்பிட்டுள்ளார். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களைப் போன்ற சிலரால்தான் ஆண்களிடன் ஆண்மைத்தன்மையே இல்லாமல் போய்விட்டது என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
லுங்கி அணிந்து கொள்வது சரி. ஆனால், ஸ்கர்ட் அணிவதை ஏற்க முடியாது என்று ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் ஒரு ஆடவர் ஸ்கர்ட், லேடீஸ் ஹாண்ட்பேக் மற்றும் கூலிங்கிளாஸ் அணிந்து மும்பை மின்சார ரயிலில் நடந்து சென்று பயணிகளின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.