உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவபுரஸ்கார் விருது பெறும் பிரபல நாட்டியக் கலைஞர்!
காகதீய வம்சத்தின் போர் நடனமான பேரிணி சிவதாண்டவம் ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்தது. போர்களுக்குச் செல்வதற்கு முன், உக்கிர தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாக போர்வீரர்கள் முரசு வாத்தியத்துக்கு ஏற்றவாறு நடனமாடுவார்கள். காகதீய வம்சத்தின் வீழ்ச்சி தொடங்கியவுடன், பழங்கால நடன வடிவத்தின் புகழ் ஒரு முடிவுக்கு வந்து சற்றேறக்குறைய முழுமையாகவே காணாமல் போகத்தொடங்கியிருந்தது. இருப்பினும், பல நடனக் கலைஞர்களின் பேரார்வன் கொண்ட முயற்சியின் காரணமாக, இது நவீன காலத்தில் மெல்ல மெல்லத் திரும்பி வருகிறது.
புகழ்பெற்ற நடன குரு டாக்டர் நடராஜா ராமகிருஷ்ணா பேரிணி நாட்டியத்தின் மறுமலர்ச்சிக்கு பெருமை சேர்த்தாலும், இன்னும் பலர் அதை மக்களிடம் கொண்டு செல்வதிலும், பண்டைய நடன வடிவங்களில் அதன் சரியான இடத்தைப் பெற உதவுவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு நடனக் கலைஞர் சூர்யாபேட்டையைச் சேர்ந்த தராவத் ராஜ்குமார் நாயக். கலை வடிவத்தின் மறுமலர்ச்சிக்கான அவரது முயற்சிகளுக்காக சங்கீத நாடக அகாடமியால் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் (UBKYP) வழங்கப்பட்ட முதல் பேரிணி நடனக் கலைஞர் என்ற பெருமையை அவர் சமீபத்தில் பெற்றார்.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் (மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில்) 2,500 தடவைகளுக்கு மேல் நிகழ்ச்சிகளை நிகழ்த்திய பிறகு, 33 வயதான இவர், பிரைட் ஆஃப் தெலுங்கானா விருது மற்றும் கோமரம் பீம் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பேரிணி நாட்டியம் மட்டும் போதுமா? இல்லை போதாது... அதனால் தான் பத்மஸ்ரீ-விருது பெற்ற டாக்டர் நடராஜா ராமகிருஷ்ணாவிடம் ஆந்திர நாட்டியம் கற்கச் சென்று அதன் நுணுக்கங்களை 10 ஆண்டுகள் கற்றுக்கொண்டார்.
இருப்பினும், பழங்கால நடன வடிவம் தான் சவால்கள் நிறைந்த வாழ்க்கைக்கு ஒருவரை தயார்படுத்துகிறது என்கிறார் நாயக். "பேரிணி சிவதண்டம் கடினமான காலங்களில் போர்வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போதும் ஒரு பெரிய நோக்கத்திற்காக மக்களையும் மாணவர்களையும் ஊக்குவிக்கும் திறன் இந்த நடன வடிவத்திற்கு உள்ளது என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.
33 வயதான அவருக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம் மட்டுமே போதுமானதாக இல்லை. எனவே அவர் பேரிணியை பொதுமக்களிடம் கொண்டு செல்ல விரும்பினார். “பெரிணி நடனத்தில் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்களிடையே ஆர்வம் இப்போது மேம்பட்டுள்ளது. நான் இப்போது சூர்யாபேட்டையில் PRK நாட்டிய பிரபஞ்சம் என்ற நடன அகாடமியை வைத்திருக்கிறேன், அங்கு சுமார் 70 ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பேரிணியைக் கற்பித்து வருகிறேன்,” என்கிறார் அவர்.
“2016-17ல் தெலுங்கானாவின் 31 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களில் 101 நாட்களுக்கு மேல் நீடித்த 200க்கும் மேற்பட்ட தனி பேரிணி நாட்டிய நிகழ்ச்சிகளை நான் சொந்தமாக ஏற்பாடு செய்துள்ளேன். பல தடைகள் இருந்தபோதிலும், பேரிணி நடன வடிவத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் இலக்கை என்னால் அடைய முடிந்தது, என்று கூறும் நாயக்,
"தெலுங்கானாவின் அனைத்து மாவட்டங்களிலும் பழங்கால நடன வடிவங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால், அது தானாகவே நாட்டிலிருந்தும், பின்னர் சர்வதேச அளவிலும் உரிய அங்கீகாரத்தைப் பெறும் என்பது எனது பார்வை" என்றும் கூறுகிறார்.