தண்ணீர் பாதுகாப்பு – மாற்றங்களை துரிதப்படுத்துவோம்!

உலக தண்ணீர் தினம் மார்ச் - 22
தண்ணீர் பாதுகாப்பு – மாற்றங்களை துரிதப்படுத்துவோம்!

நீரின்றி அமையாது உலகு என்பது திருவள்ளுவர் வாக்கு. பொதுமக்கள் மட்டுமல்ல பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம்.  தண்ணீரில் இருந்து தான் உலகில் உயிரின தோற்றங்கள் உருவாகியது என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப் பட்டுள்ளது .

ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படை தேவையான உணவு, உடை இருப்பிடத்தில் அடுத்தபடியாக சுத்தமான குடிநீர் இடம்பெற்றுள்ளது. அந்த அளவுக்கு தண்ணீரின் தேவை இன்றைக்கு அதிகரித்து உள்ளது.

தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி கடந்த 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாட்டு சபை மாநாட்டில் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக கடை பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தண்ணீரின் தேவையை உணர தவறினால் எதிர்காலம் கேள்விக்குறியா  ஆகிவிடும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் புள்ளி விவரங்களுடன் கூறுகின்றனர்.

குறிப்பாக உலக அளவில் ஐந்தில் ஒரு குழந்தை தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றது. அதேபோல் ஆசியாவில் 15 புள்ளி 5 கோடி குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சியான பகுதிகளில் வசிக்கிறார்கள். நாட்டில் ஆறு புள்ளி எட்டு அஞ்சு கோடி மக்கள் போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் வசிப்பிடங்களில் இருந்து இடம்பெயர்ந்து உள்ளனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் உலகில் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் சுமார் 570 கோடி மக்கள் ஒரு ஆண்டில் ஒரு மாதம் ஆவது தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படுபவர்கள் என ஐக்கிய நாடு சபை எச்சரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு உலக தண்ணீர் தினம் தினத்திற்கான கருப்பொருள் மாற்றத்தை துரிதப்படுத்துதல். உலக தண்ணீர் தினத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் தரமான நீர் மற்றும் சுகாதாரத்தை வழங்குவதாகும்.

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுமையும் சேமிக்கும் இடமாக சிவகங்கை குளத்தை மன்னன் ராஜராஜன் அமைத்தான் என்ற கல்வெட்டு செய்தி மூலம் நீர் சேமிப்பில் தமிழ் மன்னர்களின் கரிசனம் புலனாகிறது.  நீர் நிலைகளை பழுது பார்ப்பதையும் கரைகளைச் செப்பனிடுவதையும் கல்வெட்டு செய்தி மூலம் அறிகிறோம் அன்று நாம் நீர் மேலாண்மையில் கில்லாடிகளாகத்தான் இருந்தோம். ஆனால் இன்று பெய்யும் மழையை கூட நம்மால் சரியாக சேமித்து வைக்க முடியவில்லை.

நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளியும் நமக்கு கிடைக்கும் கூடுதல் நீர் என்பதை முதலில் மனதில் நிறுத்திக் கொள்ளுதல் அவசியம் .

ஆறுகளிலும் நீர் நிலைகளும் நீரைத் தேக்கி வைப்பது மணல்தான். எனவே மணல் கொள்ளையும் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

நீர்வளத்தை பாதுகாத்திடவும் பராமரித்திடவும் சேமித்திடவும் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் அவசியம்.  தண்ணீரே வாழ்க்கையின் அடிப்படைக் கட்டுமான பொருள்.

மழை வருவதற்கான தேவையான மரங்களை வளர்ப்போம், காற்றை மாசு படுத்தாமல் இருப்போம். மழை பெருகினால் ஆறுகளிலும் குளங்களிலும் நதிகளிலும் தண்ணீர் வற்றாமல் இருக்கும். மழை நீர் சேமிப்பு தொட்டிகளை வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் உருவாக்குவோம். ஒவ்வொரு சொட்டு நீரையும் கண்ணும் கருத்துமாக சேகரித்து தண்ணீர் வளத்தை பெருக்குவோம்.

நீர் நிலைகளை காப்பது மூலம் நீர் வளம் காப்போம் நீர் வளம் நிலவளத்தை உருவாக்கும் நிலவளம் என்பது நம்மோடு பாரம்பரியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com