தில்லி மெட்ரோ ரயிலில் தடையை மீறி பஞ்சாபி பாடலுக்கு டான்ஸ் ஆடிய பெண்!
தில்லி மெட்ரோ ரயிலில் பெட்டிகளில் அமர்ந்து பயணம் செய்யும்போது விடியோ படம் எடுப்பதற்கு தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பொரேஷன் தடைவிதித்துள்ள போதிலும் பயணிகள் அதை பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
பலமுறை எச்சரித்தும் சில பயணிகள் விடியோ எடுப்பதில் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் தில்லி மெட்ரோவில் பயணம் செய்த ஒரு பெண் பஞ்சாபி பாடல்களுக்கு ஏற்ப நடனமாடியது விடியோகவாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.
அந்த விடியோவில் சாம்பல்நிற ஸ்கர்ட் மற்றும் சிவப்புநிற மேல்சட்டை அணிந்த ஒரு பெண் மிகவும் உற்சாகமாக பஞ்சாபி பாடலுக்கு ஆட்டம் போடுகிறார். காகா என்பவர் பாடிய பஞ்சாபி பாடலுக்கு ஏற்றவாறு அந்த பெண் கைகளையும் கால்களையும் அசைத்து நடனம் ஆடுகிறார். அந்த பெண் தனது இன்ஸ்டாகிராமில் இதை வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவின் கீழ், “மெட்ரோ ரயிலில் இப்படி ஆட்டம் போடுவதற்கு அனுமதியில்லை என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் முதல்முறையாக பஞ்சாபி பாடலுக்கு நடனமாடியுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடியோவை 2 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அவரது விடியோவுக்கு பல்வேறு கருத்துக்கள் பதிவாகியுள்ளன.
ஒரு சிலர் அவரது டான்ஸையும், அவரது தன்னம்பிக்கையையும் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் சிலர் தங்கள் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
விதிகளை மீறி மெட்ரோ ரயிலில் ஆட்டம் போட்ட அந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக தில்லி மெட்ரோ ரயிலில் நடக்கும் சம்பவங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாவது அதிகரித்துள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பொரேஷன் கூறியுள்ளது. பலமுறை எச்சரித்தும் யாரும் விதிகளை பின்பற்றுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் தில்லி மெட்ரோ, பயணிகள் பயணம் செய்யும்போது விடியோ பதிவு செய்வதற்கு தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தில்லி மெட்ரோவில் பயணம் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்காதீர்கள்” என்று தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பொரேஷன் குறிப்பிட்டுள்ளது.