நீங்க லைக் போட்ட மட்டும் போதும்! 39 லட்சத்தை இழந்த பொறியாளர்!

நீங்க லைக் போட்ட மட்டும் போதும்! 39 லட்சத்தை இழந்த பொறியாளர்!

யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் வரும் வீடியோக்களைப் பார்த்து தமக்குப் பிடித்திருந்தால் லைக் செய்தும், ஷேர் செய்வதும் செய்து வருகிறோம். அதனால் அந்த வீடியோக்களுக்கு லைக் செய்தால் பணம் தருவதாகக் கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. 

சென்னையைச் சேர்ந்த பொறியாளர் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே இந்த மோசடியில் பணத்தை இழந்துள்ள நிலையில், பூனேவைச் சேர்ந்த ஸ்டீல் நிறுவன பொறியாளர் ஒருவர் 39 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 39 வயது பொறியாளர் ஒருவர், அங்குள்ள ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 14ஆம் தேதி சமூக வலைதளத்தில் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது மொபைல் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வரும் வீடியோக்களை லைக் செய்தால், 50 முதல் 150 ரூபாய் வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதில் பகுதி நேரமாக இந்த வேலையை பார்க்கலாம் என்றும், இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை என்றும், நீங்கள் ஓய்வு நேரத்தில் சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் நேரத்திலேயே பணம் சம்பாதிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கவர்ச்சி விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட அந்த பொறியாளர், கூடுதலாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் அவர்கள் கூறியபடி வீடியோக்களை லைக் செய்யும் வேலையைச் செய்துள்ளார். 

கடந்த மாதம் 15 ஆம் தேதி டெலிகிராம் செயலி வழியாக அனுப்பிய லிங்குகளிலிருந்து 18 வீடியோக்களை லைக் செய்துவிட்டு, ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பியுள்ளார். அதற்காக அவருக்கு 825 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் பதினைந்தாம் தேதி இவருக்கு மேலும் 18 வீடியோக்களின் லிங்குகளை அனுப்பி லைக் செய்யச் சொல்லியுள்ளனர். இதற்கான பணத்தைப் பெற மெசஞ்சர் ஆப்பில் உள்ள ஒரு குழுவில் சேர சொல்லியள்ளனர். அந்தக் குழுவில் சேர்ந்தவுடன் லைக் செய்யும் வீடியோக்களைப் பெற, முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே லைக் செய்த வீடியோவுக்கு பணம் வந்ததால் அவர்கள் கூறியபடி 16,800 ரூபாயை அளித்து வீடியோக்களைப் பெற்று லைக் செய்துள்ளார். இதற்காக அவருக்கு 27650 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதியன்று, 6,82,000 அதற்கு அடுத்த நாள் 9,00000 ரூபாயையும் அனுப்பி வீடியோக்களைப் பெற்று விடிய விடிய லைக் செய்துள்ளார். 

ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற ஆசையில் அவர் தீவிரமாக பணியாற்றியுள்ளார். அப்போது இவர் வீடியோக்களை லைக் செய்ய லைக் செய்ய பணம் வாலட்டில் ஏறிக்கொண்டே இருந்துள்ளது. மொத்தமாக 40 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளது. அந்தந் பணத்தை எடுக்க முயன்றபோது, மேலும் 20 லட்சம் ரூபாயை அனுப்பி அதற்கான வீடியோக்களை லைக் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் எனக் கூறியுள்ளனர். இதனால் ஏப்ரல் 19ஆம் தேதி மேலும் 20 லட்சம் ரூபாயை அனுப்பி விட்டு வீடியோக்களை லைக் செய்திருக்கிறார். அப்போதும் வாலட்டில் பணம் சேர்ந்ததே தவிர, அதை அவரால் எடுக்க முடியவில்லை. 

இதனால் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மேலும் 30 லட்சம் ரூபாய் செலுத்தி வீடியோக்களை லைக் செய்தால் மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என கூறி இருக்கின்றனர். அப்போதுதான் அவர்களின் பொறியில் சிக்கிவிட்டது அந்த பொறியாளருக்கு தெரிய வந்துள்ளது. இதற்கு மேல் தன்னிடம் பணம் இல்லை என்றும், வாலட்டிலுள்ள பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றுமாறும் அவர் கூறியுள்ளார். 

அதன் பிறகு அந்த கும்பல் தனது குழுவை கலைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டது. அதன் பிறகு பூனே சைபர் கிரைம் போலீசில் ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். 

அதிக உழைப்பில்லாமல் எளிமையாக பணமீட்டும் ஆசையில், யாரும் இதுபோன்ற வலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com