

மும்பை லோக்கல் ரயில் சேவையில் நடந்த மற்றொரு மோசடி முயற்சி மத்திய ரயில்வே நிர்வாகத்தை அதிர வைத்துள்ளது.
இந்த முறை, அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி சீசன் டிக்கெட்டுகளுடன் ஏ.சி. லோக்கல் ரயிலில் பயணம் செய்த மூன்று பயணிகள் சிக்கியுள்ளனர்.
நவம்பர் 28-ஆம் தேதி மாலை 6:45 மணியளவில் பரேல் – கல்யாண் ஏ.சி. லோக்கலில் வழக்கமான டிக்கெட் பரிசோதனை நடந்தது.
அப்போது, பயணச் சீட்டு ஆய்வாளர் (TTI) பிரசாந்த் காம்பிளே மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், ஒரு இளம்பெண் உட்பட மூன்று பேரிடம் சீசன் டிக்கெட்டுகளைக் காண்பிக்கும்படி கேட்டனர்.
ஒரே எண், சிக்கிய மூவர்!
மூவரும் தங்கள் டிக்கெட்டை அதிகாரபூர்வமான யு.டி.எஸ். (UTS) செயலிக்குள் காண்பிப்பதற்குப் பதிலாக, அதை ஃபோனின் டாக்குமென்ட் ஃபோல்டரில் சேமித்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
செயலியில் டிக்கெட்டைக் காட்டச் சொன்னபோது, அவர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை.உடனே டிக்கெட்டை உன்னிப்பாக ஆராய்ந்தபோது, அதிர்ச்சிகரமான உண்மை வெளிப்பட்டது.
அந்த மூன்று டிஜிட்டல் பாஸ்களிலும் ஒரேயொரு யு.டி.எஸ். எண் (XOOJHN4569) மட்டுமே இருந்தது.
உண்மையான யு.டி.எஸ். டிக்கெட்டுகளுக்கு தனித்துவமான எண்கள் இருக்கும் நிலையில், மூன்று டிக்கெட்டுகளிலும் ஒரே எண் இருந்தது, அவை போலியாக உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தியது.
தொடர்ந்து, அவர்களுடைய மொபைல் எண்களைச் சரிபார்த்தபோது, அவர்களுக்கு எந்தவொரு சீசன் டிக்கெட்டும் வழங்கப்படவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டது.
குர்லாவில் வழக்குப் பதிவு
மோசடியில் ஈடுபட்ட நீரஜ் தல்ரேஜா, அதர்வ பாக் மற்றும் அதிதி மங்ளூர்கர் ஆகிய மூன்று பேரும் குர்லா அரசு ரயில்வே போலீசாரிடம் (GRP) ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில், இந்த சீசன் டிக்கெட்டுகளை உருவாக்க, ஏ.ஐ. கருவிகள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இது போன்ற ஏ.ஐ. மூலம் போலி டிக்கெட் தயாரிக்கும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்துள்ளதைக் காவல்துறை உறுதி செய்துள்ளது.
பாரதிய நியாய சம்ஹிதா (BNS) 2023 சட்டத்தின் கீழ், மோசடி, போலியாகச் செய்தல் மற்றும் முறைகேடான பயணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதம் மற்றும் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
மத்திய ரயில்வே நிர்வாகம், ஆய்வாளர் பிரசாந்த் காம்பிளேயின் விழிப்புணர்வைப் பாராட்டியுள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட கவுண்டர்கள், ஏ.டி.வி.எம். இயந்திரங்கள் அல்லது அதிகாரபூர்வமான யு.டி.எஸ். செயலி மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்று பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட போலி டிக்கெட்டுகளைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.