அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பிரைன் நிக்கோல் அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார். 50 வயதான அவருக்கு ஆண்டுக்கு 950 கோடி ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கலிபோர்னியாவில் வசிக்கும் அவர், 1,600 கிலோமீட்டர் தொலைவில் சியாட்டில் நகரில் உள்ள ஸ்டார்பக்ஸ் தலைமை அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும். இதற்காக, நிறுவனத்தின் ஜெட் விமானத்தை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், ஒருவேளை தினமும் வரமுடியவில்லை என்றால் வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும் அவருக்கான ஆஃபர் லெட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்த ஸ்பெயினை சேர்ந்த மரியா (117) வயது மூப்பால் உயிரிழந்தார். முதல் உலகப்போர், 2-ம் உலகப்போர், ஸ்பெயின் சிவில் போர், கொரோனா உள்ளிட்ட பல வரலாற்று சம்பவங்களை இவர் வாழ்க்கையில் சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
குரங்கம்மை காற்றின் மூலம் பரவாது என்பதால் குரங்கம்மையின் பரவலை கட்டுப்படுத்த முடியும். சொறி, சிரங்குகளில் இருந்து வெளியேறும் நீரால் நேரடி தொடர்பு மூலம் குரங்கம்மை பரவக்கூடியது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆப்ரிக்காவில் இருந்து பல நாடுகளுக்கு இந்த நோய் பரவி வருவதால், குரங்கம்மை பரவலைத் தடுக்க விமான நிலையங்கள், மருத்துவமனைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. நடிகர் விஜய் கட்சிக் கொடியில் வெற்றியைக் குறிக்கும் வாகைப் பூ இடம் பெற்றுள்ளதாகவும், கொடியில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய 3 நிறங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், "நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும். நாளை கட்சி கொடியை அறிமுகப்படுத்தி, கட்சி பாடலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். நாளை காலை 9.15 மணிக்கு பனையூர் தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும்," என கூறிய தவெக தலைவர் விஜய் பனையூரிலுள்ள தமிழக வெற்றி கழக தலைமையகத்தில் நாளை கட்சி கொடியேற்றுகிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.