#BIG NEWS : இன்று முதல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்..!

"இனி அரசியல் பேச மாட்டேன், அன்புமணி பார்த்துக்கொள்வார்" - 88ஆவது பிறந்தநாளில் அதிரடி முடிவை அறிவித்த மருத்துவர் ராமதாஸ்!
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் தனது 88வது பிறந்தநாளை முன்னிட்டு தீவிர அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் 88ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோனேரிக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 88 மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டன. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், தனது நாற்பது ஆண்டுகால அரசியல் பயணத்திற்கு நிறைவு புள்ளி வைப்பதாகத் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

"எனது 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், இன்று முதல் அரசியல் பேச மாட்டேன். அரசியலில் தலையிட மாட்டேன். கட்சியின் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் தலையிடவும் மாட்டேன். இனி பா.ம.க-வின் முழு அரசியலையும் அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார். என்னை நேரில் காண வரும் அனைவரையும் வரவேற்பேன், நலம் விசாரிப்பேன். ஆனால், தயவுசெய்து யாரும் என்னிடம் அரசியல் பேச வேண்டாம்; என்னை இனி தொந்தரவு செய்ய வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

கிராமத்து மருத்துவரில் இருந்து மக்கள் தலைவராக :

திண்டிவனத்தில் ஒரு சிறிய கிளினிக் அமைத்து, மிகக் குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து தனது பொது வாழ்வைத் தொடங்கியவர் மருத்துவர் ராமதாஸ். நோயாளிகளிடம் மருத்துவ கட்டணத்தை ஒரு சிறிய டப்பாவில் போட சொல்லி, அதில் வரும் சொற்ப தொகையைக் கொண்டு தேநீர் வாங்கி வந்து விருந்தின உபசரிப்பு செய்யும் அளவிற்கு எளிய பின்னணியை கொண்டவராக திகழ்ந்தார்.

வன்னிய சமூக மக்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தின் அடிப்படையில் வன்னியர் சங்கப் பொறுப்பை ஏற்ற ராமதாஸ், 1989-இல் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கி தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.

'குடிதாங்கிக் கொண்டான்' முதல் பா.ம.க-வின் மகுடம் வரை

தேர்தல் வெற்றிகளை தாண்டி சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு இயங்கிய ராமதாஸ், ஆரம்பக் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.

குறிப்பாக 1980களின் இறுதியில், 'குடிதாங்கி' கிராமத்தில் பட்டியல் இனத்தவரின் உடலை வன்னியர்கள் வாழும் வீதி வழியாகக் கொண்டு செல்ல எழுந்த எதிர்ப்பை மீறி, தானே அந்த உடலை எடுத்து சென்று இறுதிச்சடங்கு செய்ய வழிவகுத்தார்.

குடிதாங்கி என்ற ஊரில் தலித் ஒருவர் இறந்து விட்டார். தலித்தின் உடல் வன்னியர்கள் வாழும் கிராமத்தின் வழியாக தான் எடுத்து செல்ல வேண்டும். ஆனால் ஒரு தலித் சடலம் வன்னியர்கள் இருக்கும் பகுதியில் செல்வதை வன்னிய மக்கள் அனுமதிக்கவில்லை. பிரச்சனை பெரியதாகி கலவரம் வரும் நிலை. டாக்டர் ராமதாசுக்கு இந்த செய்தி தெரியவந்தது. உடனடியாக இந்த கிராமத்திற்கு வந்தார். வன்னிய மக்களிடம் பேசிப் பார்த்தார். ஒன்றும் நடக்க வில்லை. வன்னிய மக்களின் எதிர்ப்பை மீறி அந்த தலித்தின் சடலத்தை தானே எடுத்துக் கொண்டு வன்னிய கிராமத்தின் வழியாகவே கொண்டு சென்று இறுதிச்சடங்கள் செய்ய வைத்தார் டாக்டர் ராமதாஸ்.

இச்சம்பவத்தைக் கண்டு நெகிழ்ந்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், ராமதாஸுக்கு "குடிதாங்கிக் கொண்டான்" என்று பட்டம் வழங்கிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சமூகப் போராளியாகத் தொடங்கி, வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம், மதுவிலக்குக் கொள்கை, தமிழ் மொழி உரிமை என பல தளங்களில் தடம் பதித்த ராமதாஸின் இந்த 'அரசியல் ஓய்வு' அறிவிப்பு, பா.ம.க தொண்டர்களிடையேயும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒன்று கூடிய ராமதாஸ் குடும்பம்: கட்டிபிடித்து கண்ணீர் விட்ட ராமதாஸ் மற்றும் அன்புமணி!
பாமக நிறுவனர் ராமதாஸ்
இதையும் படியுங்கள்:
அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு: புதிய திட்டத்தை அறிவித்தது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்!
பாமக நிறுவனர் ராமதாஸ்
logo
Kalki Online
kalkionline.com