சித்தராமையா
சித்தராமையா

சித்தராமையா அமைச்சரவையில் மேலும் 24 அமைச்சர்கள்: நாளை பதவியேற்பு!

கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் மேலும் புதிதாக 24 அமைச்சர்கள் நியமிக்கப்ட உள்ளனர். இதற்கான பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெறும் எனத் தெரிகிறது.

அமைச்சரவையை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக தில்லியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இருவரும் ராகுல்காந்தி உள்ளிட்ட மத்திய தலைமையிடம் கலந்து ஆலோசித்தனர். இதையடுத்து 24 புதிய அமைச்சர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த மே 20 ஆம் தேதி சித்தராமையா கர்நாடக முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங் கார்கே உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

எனினும் அமைச்சர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதை பா.ஜ.க.வினர். குறைகூறி விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், கொரோனா தொற்று காலத்தில்

முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மட்டும் செயல்பட்டு வந்ததை சுட்டிக்காட்டினர்.

அமைச்சர்கள் நியமனம் மற்றும் இலாகா ஒதுக்கீடு என்பது சிக்கலான பணியாகும். பல்வேறு சமூகத்தினருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்து சமநிலையில் இலாகாக்களை ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.

காங்கிரஸ் வெற்றிக்கு பெரிதும் உதவியதால் தங்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் முதல்வராக வரவேண்டும் என்று லிங்காயத்து சமூகத்தினர் கோரிவந்தனர்.

லிங்காயத்து சமுதாயத்தினருக்கு முதல்வர் பதவி கிடைக்காத நிலையில் முக்கிய துறைகள் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.

அடுத்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் வரவிருக்கும் நிலையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களவைத் தேர்தலிலும் கணிசமான வெற்றிபெற வேண்டிய நிர்பந்த்த்தில் காங்கிரஸ் உள்ளது. இது சவாலான காரியமாகும்.

இதனிடையே காங்கிரஸ் ஆட்சியில், முந்தைய பா.ஜ.க. அரசின் கொள்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு திருத்தியமைக்கபடும் என்று அமைச்சர் பிரியங் கார்கே தெரிவித்துள்ளார். அதாவது முஸ்லிம்கள் இடஒதுக்கீடு, ஹிஜாப்

தடை, மதமாற்ற தடை சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் மறுபரிசீலனை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும் வேலைவாய்ப்பை உருவாக்காத பொருளாதார கொள்கைகள் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 66 இடங்களே கிடைத்தன. மேலும் கிங் மேக்கர் என எதிர்பார்க்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு வெறும் 19 இடங்களே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com