ராகுல் வெளியேறிய பின்னர்தான் அமேதி மக்களுக்கு விடிவு பிறந்தது - ஸ்மிருதி இரானி!

ராகுல் வெளியேறிய பின்னர்தான் அமேதி மக்களுக்கு விடிவு பிறந்தது - ஸ்மிருதி இரானி!

ராகுல் காந்தியை அமேதியை விட்டு வெளியேற்றிய பின்னர்தான் அமேதி மக்களுக்கு நல்லது நடந்தது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

அமேதி மக்களவைத் தொகுதியில் நான் வெற்றிபெற்றது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். என்னால்தான் ராகுல் அமேதியிலிருந்து வயநாடுக்கு விரட்டியடிக்கப்பட்டார் என்றும் இரானி கூறினார்.

அமேதியிலிருந்து ராகுல் காந்தி விரட்டியடிக்கப்பட்டதற்கு காரணம் என்ன தெரியுமா? ராகுல் காந்தி அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்தபோது 80 சதவீத மக்களுக்கு மின்சாரம் இல்லை. மாவட்ட ஆட்சியருக்கு என தனி அலுவலகம் இல்லை. தீயணைப்புத்துறை இல்லை. ஒரு மருத்துவக் கல்லூரியோ, ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியோ, ஒரு சைனிக் பள்ளியோ, ஒரு உள்விளையாட்டரங்கமோ இல்லை.

இவையெல்லாமே அவர் அமேதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் வந்தவைதான் என்று திருவனந்தபுரத்தில், பாரதீய மஸ்தூர் சங்கத்தின் கேரள பிரிவு ஏற்பாடு செய்திருந்த மாவட்ட அளவிலான மகளிர் தொழிலாளர்கள் மாநாட்டில் பேசுகையில் ஸ்மிருதி இரானி கூறினார்.

இப்போதும் சொல்கிறேன். ராகுல்காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி.யாக நீடித்தால் அமேதி மக்களுக்கு ஏற்பட்ட நிலைதான் வயநாடு மக்களுக்கும் ஏற்படும். எனவே ராகுல், வயநாடு எம்.பி.யாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள் என்றார் ஸ்மிருதி இரானி.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் ஸ்மிருதி இரானி. அமேதி தொகுதி காந்தி குடும்பத்துடன் தொடர்புடையது. ராகுல் மற்றும் சோனியா அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு ராகுல் அமேதி தொகுதி எம்.பி.யானார். 2009 மற்றும் 2014 தேர்தலிலும் ந்த தொகுதியை தக்கவைத்துக் கொண்டார்.

2019 ஆம் ஆண்டில் ராகுல்காந்தி அமேதி (உ.பி.) மற்றும் வயநாடு (கேரளம்) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த ராகுல், வயநாடில் வெற்றிபெற்றார். கடந்த மார்ச் மாதம், மோடியை அவதூறாக பேசியதான வழக்கில் வெளியான தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இதுவரை வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடைவிதிக்கப்பட்டால் அவர் மீண்டும் எம்.பி.யாகலாம். ஆனால், இதுவரை நீதிமன்றம் அவருக்கு எந்த நிவாரணமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com