கல்விகற்க வயது ஒரு தடையல்ல: உ.பி.யில் 12-ம் வகுப்பு முடித்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!
கல்வி கற்க வயது ஒரு தடையல்ல என்பதை உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நிரூபித்துள்ளனர். 50 வயதுக்கு மேலான அவர்கள் இருவரும் சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். பட்டப்படிப்பை தொடரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பரேலி மாவட்டம், பித்ரி-செயின்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ரா. இவர் 12 ஆம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 263 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஹஸ்தினாபூர் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பிரபுதயாள் வால்மீகி தேர்வில் இரண்டாம் நிலையில் வெற்றிபெற்றுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். இப்போது நான் 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்றுள்ளேன். எனக்கு எல்.எல்.பி. படிக்க விருப்பம். இதன் மூலம் ஏழைகளுக்கு நீதிகிடைக்க உதவுவேன் என்கிறார் 55 வயதான மிஸ்ரா. இவர் உத்தரப்பிரதேச மாநிலம், பித்ரி செயின்பூர் தொகுதியிலிருந்து பா.ஜ.க. வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2017 முதல் 2022 வரை சட்டப்பேரவை. உறுப்பினராக இருந்தவர்.
பப்புஜி என அழைக்கப்படும் மிஸ்ரா, பரத்தாவுல் என்னுமிடத்தைச் சேர்ந்தவர். இவர் தேர்வில் வெற்றிபெற்ற செய்தி கேட்டதும் ஊர் மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மிஸ்ராவை 12- ஆம் வகுப்பு படிக்குமாறு அறிவுறுத்தினேன். அவரும் படித்து தேர்வுக்கு தயாரானார். இப்போது அவர் தேர்வில் வெற்றியும் பெற்றுள்ளார். இது எனக்கு பெருமை அளிக்கிறது என்று கூறினார் பேராசிரியர் வந்தனா சர்மா.
59 வயதான வால்மீகி, மீர்ட்டின் ஹஸ்தினாபூர் தொகுதியிலிருந்து இரண்டு முறை சமாஜவாதி கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். பாக்பட்டில் உள்ள ஆதர்ஷ் கல்லூரி மூலம் தேர்வெழுதி 12- ஆம் வகுப்புத் தேர்வில் இரண்டாம் நிலை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
வால்மீகி 2002 முதல் 2007 வரையிலும் பின்னர் 2012 –லிருந்து 2017 வரையிலும் எம்.எல்.ஏ.வாக இருந்தார். இரண்டாவது முறை எம்.எல்.ஏ.வான போது இவர் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
“நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். ஏனெனில் அவர்களால் ஒரு நல்ல வழக்குரை வைத்து வாதாட முடியவில்லை. எனவே நான் எல்.எல்.பி. படிக்க முடிவு செய்துள்ளேன். நான் வழக்குரைஞரான பிறகு அவர்களுக்காக வாதாடுவேன்” என்றார் ராஜேஷ் மிஸ்ரா.
பொதுத் தேர்வில் கண்காணிப்பு அதிகமாக இருந்ததால் யாராலும் காப்பி அடிக்க முடியவில்லை என்றார்.
இது தொடர்பாக செகண்டரி கல்வி இயக்குநர் மஹேந்திர தேவ் கூறுகையில், தேர்வில் மோசடி நடைபெறாமல் தடுக்க 8,783 தேர்வு மையங்களிலும் குரல் பதிவுடன்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தன. மேலும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.