40 சதவீத கமிஷன் வாங்கும் பா.ஜ.க, 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் - ராகுல் காந்தியின் கணிப்பு!
கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு ராகுல் காந்தி பல கூட்டங்களில் பேசி வருகிறார். பதவி நீக்கத்திற்கு காரணமான அதே கோலார் தொகுதியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தவர், கர்நாடக பா.ஜ.க அரசில் ஊழலில் திளைப்பதாக பேசியிருக்கிறார்.
ஜெய் பாரத் என்னும் பெயரில் கோலார் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தார். கர்நாடக பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
204 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும் ராகுல் காந்தி பேசினார். கல்யாண கர்நாடக பகுதியில் உள்ள 6 மாவட்டங்களுக்கு அரசியல் சாசன சிறப்பு அந்தஸ்தை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி வழங்கப்பட்ட காரணத்தால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பயனடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி இதுவரை அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகளின் மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது. பெரும் பணக்காரர்களுக்கானது அல்ல. ஆனால், ஆளும்கட்சியோ பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பிரதமருக்கும், அதானிக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்டேன். ஆளுங்கட்சியின் ஊழல்களை விமர்சித்தேன். அதனால் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள்.
அதானியின் ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது என்றுதான் கேட்டேன். அதன் பிறகு என்னை பேச அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் ஊழல் குறித்து கேள்வி எழுப்பியதால் பா.ஜ.கவினர் பயந்துவிட்டார்கள். கர்நாடகத்தை சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். அது குறித்து யாரும் இதுவரை விளக்கம் தெரிவிக்கவில்லை.
இவற்றையெல்லாம் பற்றி பிரதமர் வாய் திறப்பதில்லை. அது ஏன்?. சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு, கர்நாடக சோப்பு நிறுவன முறைகேடுகள் உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால் பிரதமர் மோடி, தான் ஊழலுக்கு எதிரானவர் என்று சொல்கிறார். 40 சதவீத கமிஷன் பெறும் பா.ஜ.கவுக்கு 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வைக்க வேண்டும்.
40 சதவீத கமிஷன் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ள பணத்தைக் கொண்டு மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவார்கள். 40 சதவீத கமிஷனுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, இட ஒதுக்கீடு விஷயத்தில் தாராளமாக நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரமும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, 2 ஆண்டுகளுக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3,000, டிப்ளமோ படித்தோருக்கு தலா ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்டம், அன்ன பாக்கிய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றெல்லாம் அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை மிஞ்சிவிடும் போல் தெரிகிறது.