பா.ஜ.கவின் அடுத்த தேர்தல் யுக்தி ரெடி - மீண்டும் அமைச்சராகிறாரா, முக்தார் அப்பாஸ் நக்வி?

பா.ஜ.கவின் அடுத்த தேர்தல் யுக்தி ரெடி - மீண்டும் அமைச்சராகிறாரா, முக்தார் அப்பாஸ் நக்வி?

கர்நாடகாவில் பா.ஜ.கவுக்கு கிடைத்த தோல்வி, தேசியத் தலைமையின் அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல்களை எதிர்கொள்வதற்கு முன்பு அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக டெல்லியிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து பா.ஜ.க ஆட்சியை இழந்திருக்கிறது. வளர்ச்சி அரசியல் கைகொடுத்தாலும், உள்ளூரில் நடந்த சோஷியல் இன்ஜினியரிங் பரிசோதனைகள் தோல்வியில் முடிந்துவிட்டதாக பா.ஜ.க நினைக்கிறது. லிங்காயத்துகளின் வாக்குகள் மொத்தமாக கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் செய்த அத்தனை முயற்சிகளும் பூமராங்காக தோல்வியில் முடிந்ததை தேசியத் தலைமை எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசியல் கணக்குகளை முன்வைத்து புதிய யுக்திகளை தயார் செய்து வருகிறது. முதல் கட்டமாக, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

மோடியின் அமைச்சரவையில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி அமைச்சராக இருந்து வந்தார். மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி, பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வந்தார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்களில் அவரும் ஒருவர்.

சென்ற ஆண்டு அவரது மாநிலங்களைவை எம்.பி பதவிக்காலம் முடிவடைந்தது. மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவருக்கான வாய்ப்புகள் தரப்படவில்லை. இதனால் அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டியிருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த பீகாரைச் சேர்ந்த ஷநவாஸ் உசைனும் போட்டியில் இருக்கிறார். இவரும் பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் சென்ற ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர். நிதிஷ் குமாருடனான பா.ஜ.க கூட்டணி முறிந்ததும் அமைச்சர் பதவி பறிபோய்விட்டது. இவருக்கும் மாநிலங்களைவையில் வாய்ப்பு தந்து அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

முக்தார் அப்பாஸ் நக்வி அல்லது ஷநவாஸ் உசைன் இருவரில் யாராவது ஒருவருக்கு அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், மத்தியில் அடுத்த அமைச்சரவை மாற்றம் எப்போது என்பதுதான் தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com